ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுவதா?

250 0

‘ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதையே எதிர்க்கட்சிகள் நோக்கமாக கொண்டு செயல்பட்டால் அது மக்கள் விரோத செயலாகும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா கோவை கொடிசியா தொழிற்கண்காட்சி வளாகத்தில் நடைபெற்றது. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றார். முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 மாவட்டங்களுக்கான ரூ.1,313 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

மேலும் பல்வேறு துறைகளை சேர்ந்த புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் 6,200 பயனாளிகளுக்கு ரூ.12 கோடியே 12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-

இந்த திட்டங்களில் பெரும்பாலானவை விதி 110-ன் கீழ் ஜெயலலிதா அறிவித்தவை. அவ்வாறு அறிவித்த திட்டங்கள் பல நிறைவு செய்யப்பட்டுவிட்டன. மீதமுள்ளவை விரைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பவானி ஆற்றை நம்பி இருக்கும் நமது விவசாய பெருமக்களின் உரிமையை பாதுகாக்க இந்த அரசு எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பவானி மற்றும் அதன் கிளை நதிகளில் கேரள அரசு தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது. பிரதமரிடமும் நான் நேரில் வலியுறுத்தி உள்ளேன். இந்த அரசு எப்போதும் விவசாயிகளின் பக்கம் இருப்பதோடு, அவர்களுக்கு அரணாகவும் விளங்கும்.

தமிழ், தமிழர் என்று சொன்னவர்களெல்லாம் எதையும் செய்யவில்லை. சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்பார்கள். அவர்கள் இதுவரை சொல்லிக்கொள்ளும்படியாக எதையாவது செய்திருக்கிறார்களா? என்றால் இல்லை. இதனால் தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் பல தொல்லைகள் தான் விளைந்தன. இந்த அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும்.

‘எதிர்க்கட்சி என்றால் அரசின் கொள்கைகளை, திட்டங்களை எதிர்க்கின்ற கட்சி என்ற பொருள் இல்லை. அரசு திட்டங்களின் நிறை குறைகளை எடுத்துச்சொல்லி, குறைகளை களைவதற்கான ஆலோசனைகளை வழங்குவது தான் எதிர்க்கட்சியினுடைய நற்பண்பு’ என்று எதிர்க்கட்சி பற்றிய இலக்கணத்தை ஜெயலலிதா தெளிவாக எடுத்துரைத்து இருந்தார். அந்த வாக்கையே வேதவாக்காக கொண்டு செயல்படும் எதிர்க்கட்சிகளையே மக்கள் மதிப்பார்கள்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது ஒன்றையே நோக்கமாக கொண்டு அரசியல் நடத்துவது மக்கள்விரோத செயலாகும். ஆளுங்கட்சி மீது அவதூறு பேசுவதுதான் எதிர்க்கட்சியின் பணி என்று நினைத்துக்கொண்டு செயல்படுபவர்களை மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். தாங்கள் இல்லை என்றால் நாடே இயங்காது என்று பலர் மக்களிடையே ஒரு மாயையை உருவாக்கி வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த அரசு மக்கள் அரசு. இந்த அரசு ஜெயலலிதாவின் அரசு. விவேகத்துடன் விரைந்து செயல்படும் அரசு.

அவினாசி, அன்னூர், திருப்பூர் மற்றும் பல்லடம் ஆகிய வறண்ட பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான, பில்லூர் அணையிலிருந்து அத்திக்கடவு என்ற இடத்தில் கால்வாய் அமைப்பதற்காக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்று பெயரிடப்பட்டு ஜெயலலிதாவின் ஆசியால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் முக்கிய நோக்கம், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 31 பொதுப்பணித்துறை ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 538 குளங்களை நிரப்பி நிலத்தடி நீரை செறிவூட்டுவதாகும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து மத்திய அரசின் ஒப்புதலை கேட்டுள்ளேன். இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 140 வருடங்களாக இல்லாத வறட்சி தற்போது ஏற்பட்டுள்ளது. அதை போர்க்கால அடிப்படையில் சரிசெய்யும் பணியை இந்த அரசு ஏற்றுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நீர்நிலைகளை புனரமைக்க பண்டைய காலத்தில் இருந்த குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விவசாயக் குழுக்களை வைத்து தொடங்கப்படுகிறது.

நிலத்தடி நீரை உயர்த்தி வறட்சியை சமாளிக்க தொலைநோக்கு திட்டமான மழைநீர் சேகரிப்பு திட்டத்தை எப்படி ஒரு மக்கள் இயக்கமாக ஜெயலலிதா உருவாக்கினாரோ அதைப்போல, குடிமராமத்து திட்டத்தையும் விவசாயிகளின் ஒருங்கிணைப்போடு இந்த அரசு ஒரு மக்கள் இயக்கமாக நடத்தும் என்று உறுதி கூறுகிறேன்.

முதற்கட்டமாக நடப்பு நிதி ஆண்டில் தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் 1,519 குடிமராமத்து பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இது 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.விழாவில் சபாநாயகர் தனபால் உள்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்துகொண்டனர்.