ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு?

315 0

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஏப்ரல் 12ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக சசிகலா அணி, அதிமுக ஓ.பி.எஸ் அணி, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், வேட்பு மனு தாக்கல் தொடங்கிய பிறகும் மக்கள் நல கூட்டணியின் சார்பில் முடிவு அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில், மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திடீரென்று நேற்று மாலை வேட்பாளரை அறிவித்தது. இதன் மூலம், மக்கள் நல கூட்டணி உடைந்தது உறுதியானது.

இதை தொடர்ந்து, கூட்டணியில் இருந்த மற்ற 2 கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தங்களுடைய நிலைப்பாடை இன்று அறிவிக்கிறது. இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூட்டாக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களை சந்தித்து கூறியதாவது: மக்கள் பிரச்னைக்காக மக்கள் நல கூட்டியக்கம் உருவாக்கப்பட்டது. பிறகு, அரசியலில் பங்கேற்க சிலர் வந்தனர். சில கட்சிகள் வெளியேறின. தற்போது, கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.கே. நகரில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்கள். அது அந்த கட்சியின் முடிவு. அதில் தவறு இல்லை.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களுடைய அணிக்கு பகிங்கரமாக வேண்டுகோள் விடுத்தார். அப்போதே நன்றி தெரிவித்து பரிசீலிப்போம் என்று தெரிவித்தோம். அதிமுக ஓபிஎஸ் அணி உள்பட எந்த கட்சிகளாக இருந்தாலும் சரி தேர்தலில் போட்டியிடும் போது ஆதரவு கேட்பது அவர்களது கடமை.  எங்கள் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடந்தது. அதில் தேர்தலில் நாட்டில் ஏற்பட கூடிய அரசியல் மாற்றங்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே, இவையெல்லாம் குறித்து பரிசீலித்து முடிவு செய்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் கலந்து பேசி 2 பேரும் நாளை (இன்று) முடிவு அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் மு.வீரபாண்டியன் உடனிருந்தார்.