இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும், மிகப்பெரிய மாநிலமாகவும் உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகின்றது. ஆனால், சாலை விபத்தில் தமிழகம்தான் முதல் மாநிலமாக உள்ளதாகவும், அதிகம் பேர் உயிரிழப்பதாகவும் தேசிய சாலை பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் கமல் சோய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று கமல் சோய் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியாவிலேயே மிகப்பெரிய மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்தாலும், தமிழகத்தை ஒப்பிடும் போது சாலை விபத்துக்கள் அங்கு குறைவுதான். காரணம், தரமான கம்பெனிகளுக்கு அங்கீகாரம், வேகத்தடை, சாலை விதிகளை பின்பற்றுவது, அவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் மாநில அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சாலை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, கடந்த 2015ம் ஆண்டில் தமிழகத்தில் 69 ஆயிரத்து 59 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 79 ஆயிரத்து 746 பேர் காயம் அடைந்துள்ளனர். 15 ஆயிரத்து 642 பேர் பலியாகியுள்ளனர். இதுவே 2014ல் 67 ஆயிரத்து 250 விபத்துகளில், 77 ஆயிரத்து 725 பேர் காயமடைந்துள்ளனர். 15 ஆயிரத்து 190 பேர் இறந்துள்ளனர். ஆக, ஆண்டுக்கு ஆண்டு பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. தமிழகத்தில் 2.25 கோடி வாகனங்கள் இயங்குகின்றன. இதில் 25 லட்சம் வாகனங்கள் வணிக ரீதியாக இயங்குகின்றன. போக்குவரத்து வாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை கண்டிப்பாக பொருத்த வேண்டும் என கடந்த 15.4.2015ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சாலை விபத்துக்கு முக்கிய காரணமே வாகனத்தை வேகமாக இயக்குவது, மது அருந்திவிட்டு ஓட்டுவதுதான். இதில், 28 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். தமிழகத்தில் எக்கோ கேஸ் இம்பெக்ஸ், கிஹாய்சால் டெக்னாலஜிஸ், ஹோவல் ஸ்கேல்ஸ் அண்ட் சிஸ்டம், மைக்ரோ ஆட்டோடெக், டிஜிலா டிவைசஸ் போன்ற நிறுவனங்கள் மீது தரமற்ற கருவிகளை விநியோகம் செய்வதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. மேலும்அங்கீகாரம் இல்லாத தயாரிப்பாளர்களின் வேகக் கட்டுப்பாட்டு சாதனங்களை பொருத்துவது வெளிப்படையாக அதிகரித்து வருகிறது. சரியான முறையில் சட்டங்களை அமல்படுத்தாததுதான் இதற்கு காரணம்.
வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை கண்டிப்பாகப் பொருத்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அவை முறையாக பொருத்தப்படுகின்றனவா என்பதை மாநில போக்குவரத்து துறை கடுமையான முறையில் கண்காணிக்க வேண்டும். தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் சில சட்டவிரோதமான, அங்கீகாரம் பெறாத தயாரிப்பாளர்கள் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு புறம்பாக குறைபாடுகள் உள்ள வேகக் கட்டுப்பாட்டு சாதனங்களைப் பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

