நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை போலீசாரிடம் இருந்து பெற நீதிபதி கர்ணன் மறுத்துவிட்டார்.
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை போலீசாரிடம் இருந்து பெற நீதிபதி கர்ணன் மறுத்துவிட்டார்.இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்பட 7 பேர் தனக்கு ரூ.14 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்று அவர் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.சென்னை ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்த சி.எஸ்.கர்ணன் கடந்த ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு பணி இடமாறுதல் செய்யப்பட்டார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உள்பட சில நீதிபதிகள் மீது அவர் பல்வேறு புகார்களை கூறி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதங்களை எழுதினார்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுத்தது.இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கர்ணன் மார்ச் 10-ந்தேதி ஆஜர் ஆகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. ஆனால், அவரோ அவருடைய சார்பில் வக்கீல்கள் யாருமோ சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் மற்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோகுர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகிய 7 பேர் கொண்ட அமர்வு நீதிபதி சி.எஸ்.கர்ணன் வருகிற 31-ந்தேதி காலை 10.30 மணி அளவில் சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஜாமீனில் வரக்கூடிய வாரண்டு உத்தரவு ஒன்றை கடந்த 10-ந்தேதி பிறப்பித்தது.இதை கர்ணனின் வீட்டில் நேரடியாக கொண்டு சென்று அவரிடம் மேற்கு வங்க மாநில போலீஸ் டி.ஜி.பி. ஒப்படைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தது. எனினும் இந்த உத்தரவு சட்டவிரோதமானது என்று கர்ணன் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுடன் மேற்கு வங்க டி.ஜி.பி. சுரஜித் கர் புர்கயஸ்தா, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார், டி.ஐ.ஜி. (சி.ஐ.டி) ராஜேஷ் குமார் ஆகியோருடன் நேற்று காலை கொல்கத்தா நியூடவுனில் உள்ள நீதிபதி கர்ணன் வீட்டுக்கு சென்றார்.அப்போது, அவரிடம் மார்ச் 31-ந்தேதி அன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும்படி கூறி பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்டை புர்கயஸ்தா கொடுத்ததாக அறியப்படுகிறது. போலீஸ் அதிகாரிகளின் வருகையையொட்டி, நீதிபதி கர்ணன் வீட்டின் முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.இதற்கிடையே, நீதிபதி கர்ணனின் வக்கீல் ரமேஷ் கூறும்போது, “சுப்ரீம் கோர்ட்டின் வாரண்டை, நீதிபதி கர்ணனிடம் போலீஸ் அதிகாரிகள் வழங்க முயன்றனர். ஆனால் அவர் அதை வாங்கவில்லை” என்று மறுத்தார்.
இதுபற்றி நீதிபதி கர்ணன் கூறுகையில், “சுப்ரீம் கோர்ட்டின் வாரண்டை நான் வாங்கவில்லை. தலித் நீதிபதியான என் மீதான வன்கொடுமையை இத்துடன் சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திக் கொள்ளவேண்டும். இதுபோன்ற தொந்தரவு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு கோர்ட்டின் கண்ணியத்தை, ஒழுக்கத்தையும் காக்கவேண்டும்” என்றார்.அதேநேரம், போலீஸ் அதிகாரி ராஜேஷ்குமார் நீதிபதி கர்ணன் வாரண்டை ஏற்றுக் கொண்டார் என்று தெரிவித்தார்.இதற்கிடையே, தன் மீது விசாரணை நடத்தும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்ட நீதிபதிகள் மற்றும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டும் தனித்தனியே கடிதங்களையும் நீதிபதி சி.எஸ். கர்ணன் எழுதி உள்ளார்.அந்த உத்தரவு மற்றும் கடிதங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-
7 நீதிபதிகளும் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி முதல் நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை சார்பாக நான் பணிபுரிவதை தடுத்து வருகின்றனர். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எனது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நீதிபதிகள் பொதுவாழ்வில் என் மீதான நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டனர். எனவே அவர்கள் 7 பேரும் சேர்ந்து எனக்கு நஷ்ட ஈடாக ரூ.14 கோடியை அடுத்த 7 நாட்களுக்குள் தரவேண்டும். இல்லையென்றால் இந்த உத்தரவுகளின் மீது மேலும் சில உத்தரவுகளை பிறப்பிப்பேன்.
இதேபோல் கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி நான் கூறிய புகார்களின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் பணிபுரியும் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும்.இவ்வாறு அவற்றில் கூறப்பட்டு இருந்தது.

