பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ கோர்ட்டுகள் – அரசியல் கட்சிகள் சம்மதம்

181 0

தீவிரவாத தாக்குதல் வழக்குகளை விசாரிக்க பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ கோர்ட்டுகள் அமைக்க அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளிக்கூடத்தில் 2014-ம் ஆண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி 140-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு பயங்கரவாத வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க ராணுவ கோர்ட்டுகள் அமைக்கப்பட்டன. அதன் 2 ஆண்டு பதவிக்காலம் முடிந்து விட்டது. இந்த காலகட்டத்தில் பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய 161 பேருக்கு அவை மரண தண்டனை விதித்துள்ளன. அவர்களில் 21 பேர் தூக்கில் போடப்பட்டு விட்டனர்.

தற்போது பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இத்தகைய வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க மேலும் 2 ஆண்டுகளுக்கு ராணுவ கோர்ட்டு அமைக்க வேண்டும் என்று ராணுவம், அரசிடம் கேட்டது.

இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் இஸ்லாமாபாத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டத்தை கூட்டி நீண்டதொரு ஆலோசனை நடத்தியது. அதில் மேலும் 2 ஆண்டு காலத்துக்கு ராணுவ கோர்ட்டு அமைக்க அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்து விட்டன. இதை பாராளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் தெரிவித்தார்.

அப்போது அவர், “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை என்ற காரணத்தினால் பாகிஸ்தானில் மேலும் 2 ஆண்டு காலத்துக்கு செயல்படும் வகையில் ராணுவ கோர்ட்டுகள் அமைக்க சம்மதம் தெரிவித்துள்ளோம்” என குறிப்பிட்டார்.இதற்கு ஏற்றபடி அரசியல் சாசன சட்டம் திருத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சித்தலைவரும், முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி ராணுவ கோர்ட்டுகளுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் அவரது கட்சி கூறிய யோசனைகள் ஏற்கப்பட்டு விட்டதால் அவர் சம்மதம் தெரிவித்து விட்டார் என தகவல்கள் கூறுகின்றன.