ஏமனில் மசூதி மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 34 பேர் பலி

338 0

ஏமனில் ராணுவ மசூதி மீது கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 34 பேர் உயிரிழந்தனர்.

ஏமன் தலைநகர் சனாவை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சனாவுக்கு கிழக்கே உள்ள ராணுவ முகாம் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 34 பேர் பலியாகினர்.

மரிப் மாகாணத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள கோஃபல் ராணுவ முகாமில் உள்ள மசூதியை குறிவைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 2 ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியதாக ஏமன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரானின் தயாரிப்பான சென்ஷெல்-1 பீரங்கி மூலம் கட்யுஷா வகை ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டு விசாரணையில் தெரியவந்துள்ளதாக மரிஃப் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராணுவ முகாமில் உள்ள மசூதியை அந்த ஏவுகணை தாக்கியதில், அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த 34 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர். ஏமனில் அரசுக்கு எதிராக கிளம்பிய கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது போல, கிளர்ச்சியாளர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.