சென்னை துறைமுகத்துக்கு கன்டெய்னர்கள் மூலம் கள்ளநோட்டுகள் கடத்தலா?

211 0

வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கன்டெய்னர்களில் கள்ள ரூபாய் நோட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, சென்னை துறைமுகத்துக்கு வந்த கன்டெய்னர்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைக்க அண்டை நாடான பாகிஸ்தான் பல்வேறு வழிகளிலும் முயற்சி செய்து வருகிறது.

பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள் நேபாளம், வங்காள தேசம் வழியாக ரகசியமாக நம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு புழக்கத்தில் விடப்படுகின்றன. மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில் சமீபத்தில் 2,000 ரூபாய் கள்ளநோட்டுகள் சிக்கின. இது தொடர்பாக ஒரு நபரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கைது செய்தனர்.

தேசிய புலனாய்வு முகமையின் மேற்பார்வையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் இந்தியாவில் ரூ.400 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக தெரியவந்தது. எனவே கள்ள நோட்டுகளை ஒழிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கன்டெய்னர்களில் கள்ள 500 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்படுவதாக புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் வந்துள்ள கன்டெய்னர்களை வெளியே அனுப்பவேண்டாம் என்று சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த துறைமுகங்களில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளும், சுங்க இலாகா அதிகாரிகளும் இணைந்து நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை துறைமுகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள் மூலம் கொண்டுவரப்படும் கன்டெய்னர்கள் அங்குள்ள வளாகத்தில் வைக்கப்படுகின்றன. இதேபோல் மதுரவாயல், திருவொற்றியூர் உள்ளிட்ட 32 இடங்களில் உள்ள சேமிப்பு நிலையங்களிலும் வைக்கப்படுகின்றன. சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள துறைமுகத்துக்கும் கப்பல்கள் மூலம் கன்டெய்னர்கள் கொண்டுவரப்படுகின்றன.

சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறை முகங்களிலும், கன்டெய்னர் சேமிப்பு நிலையங்களிலும் வருவாய் புலனாய்வு மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினார்கள். நூற்றுக் கும் மேற்பட்ட அதிகாரிகள் ‘ஸ்கேனர்’ கருவிகளின் உதவியுடன் அங்கு வைக்கப்பட்டுள்ள கன்டெய்னர்களை சோதனை போட்டனர். இந்த சோதனை நடந்தபோது, கப்பல்களில் இருந்து புதிதாக கன்டெய்னர்களை அங்கு கொண்டு வந்து இறக்கி வைக்கவும், வளாகத்தில் உள்ள கன்டெய்னர் களை லாரிகளில் ஏற்றி வெளியே கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், வங்காளதேசம் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வந்துள்ள கன்டெய்னர்களை மட்டும் தீவிரமாக சோதித்து, சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதாவது இருக்கிறதா? என்பதை கண்காணித்து அனுப்பும்படி, மத்திய அரசிடம் இருந்து நேற்று மாலை சென்னை சுங்க இலாகா ஆணையத்துக்கு தகவல் வந்தது.இதைத்தொடர்ந்து, வங்காளதேசம் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து வந்த கன்டெய்னர்களை தவிர மற்ற நாடுகளில் இருந்து வந்த கன்டெய்னர்களை வெளியே கொண்டு செல்ல நேற்று மாலை 4 மணி முதல் அனுமதி வழங்கப்பட்டது.

வங்காளதேசம் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு சென்னை, காட்டுப்பள்ளி துறை முகங்கள் மற்றும் சேமிப்பு நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள கன்டெய்னர்களில் அதிகாரிகள் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொடர்ந்து சோதனை நடத்துகிறார்கள்.இந்த சோதனை பற்றி வருவாய் புலனாய்வு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இது மிகவும் ரகசியமாக நடைபெறும் சோதனை என்பதால் அதுபற்றிய தகவல் எதையும் தெரிவிக்க இயலாது” என்று கூறினார்.