முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை உடன் கைது செய்ய வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர்கள் வட மாகாணத்தின் பல இடங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.இந்நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்திலேயே எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இதனை தற்போதைய அரசாங்கமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் கைது செய்யப்படவேண்டும்.
குறித்த இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவினர்களுக்கு என்ன நடத்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், காணாமல் ஆக்கப்பட்ட பலர் அன்றைய தினமே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன், தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதைய அரசாங்கம் தயக்கம் காட்டி வருவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

