ராமநாதபுரம் மீனவ மாநாட்டில் 10 புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அவை வருமாறு:-
1. மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு வீடுகளுக்குப் பட்டா வழங்கப்படும்.
2. 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவுக் கடன் வழங்கப்படும்.
3. மீன்பிடி தடைக்கால நிவாரணத்தொகை இதுவரை ரூ.5 ஆயிரம் இருந்தது. இனி 8 ஆயிரம் ரூபாயாக அது வழங்கப்படும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில், சொன்ன முக்கியமான அறிவிப்பு இது. இந்த நிவாரணத் தொகையை 1 லட்சத்து 79 ஆயிரம் பேர் பெற இருக்கிறார்கள். * 60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
4. 1000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40 விழுக்காடு மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.
5. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண் எண்ணெய் அளவானது 3400 லிட்டரிலிருந்து 3700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
6. மானிய விலையில் வழங்கப்படும் டீசல் எண்ணெய் அளவை விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டரிலிருந்து 19 ஆயிரம் லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரிலிருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும்.
7. தங்கச்சிமடம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுகள், குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த ஆய்வுப் பணிகளையும் தொடங்கி இருக்கிறோம். * பாம்பன் வடக்கு மீனவர் கிராமத்தில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகள் தொடங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.
8. மீனவர் விபத்து காப்புறுதி திட்டத்தின்கீழ் 205 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. * காணாமல் போகும் மீனவர்களுக்கு சுழல் நிதி 25 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
9. மீனவர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அலகுத்தொகையானது ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
10. பல மீனவ கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்கவும், படகுகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தூண்டில் வளைவு அமைக்கப்படவேண்டும் என்று ஒரு கோரிக்கை இருந்து கொண்டிருக்கிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இருக்கின்ற ஒரு வழக்கு காரணமாக இந்த பணிகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. இதற்கான கடலோர மேலாண்மை திட்டத்தை விரைவில் வகுத்து, உரிய ஒப்புதலை பெற்று தூண்டில் வளைவுகள் தேவைப்படும் இடங்களில் எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் பணிகளை விரைவில் தொடங்குவோம்.
இதுவரை நான் சொன்ன அறிவிப்புகள் மூலமாக 2 லட்சத்து 77 ஆயிரத்து 347 மீனவர்கள் பயனடைவார்கள். இதற்காக, மொத்தம் 926 கோடியே 88 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப் போகிறோம். ஏறத்தாழ ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் போகிறோம். மீனவர்களுக்கு அடுத்தடுத்து இது வழங்கப்பட இருக்கிறது. இதர கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.

