தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைத் தாங்கிய பேச்சுப்போட்டி 2023 – யேர்மனி .

621 0

அன்புக்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிவாழ் தமிழீழ மக்களே,

தியாகி லெப். கேணல். திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

(செப்ரெம்பர் 15 -26.2023.)

மேற்படி விடயம் தொடர்பாக, தமிழீழ விடுதலைக்கான போராட்ட வரலாற்றிலே ஈழத்தமிழினம்மீது இந்திய வல்லாதிக்க அரசு
நிகழ்த்திச் சென்ற கறைபடிந்த கொடிய கணங்களை இலகுவில் மறந்துவிட முடியாதது மட்டுமல்ல, கூப்பிடக் கேட்டிடும் தூரமாக, தமிழர்
இறையாண்மையை புரிந்துகொண்ட அயல் நாடாக நம்பிக்கை கொண்டிருந்த மனங்களில் நம்பிக்கைக்கு துரோகமிழைத்து, இருள்
சூழ்ந்த அத்தியாயத்தை எழுதிச் சென்றதையும் மறக்கவோ மன்னிக்கவோ முடிவதில்லை.

சிறீலங்கா- இந்திய ஒப்பந்த அமுலாக்கலில், இந்திய அமைதி காக்கும் படை (IPK) என்ற போர்வையிலே போர்வலு ஆயுத
தளபாடங்கள் சகிதம் தாயக மண்ணில் காலடி பதித்த அன்றைய உலகின் நான்காவது வல்லரசாக தனை நிலைநிறுத்தி நின்ற இந்திய
வல்லாதிக்கம் ‘ஒப்பறேசன் பூமாலை’ என ஆரம்பித்து, உணவுப் பொதிகளையும் புன்னகைத்த முகங்களையும் முன்வரிசையிலே
சகட்டு மேனிக்கு நகர்த்தி, பின்வரிசையிலே வல்லாண்மைக்கான போர்த்தளபாடங்களை நிரல்ப்படுத்தி தமிழர்களது அரசியல்
அபிலாசைக்கு சாவுமணியடித்து, உரிமைப்போரை நசுக்கி, தமிழ்த்தேசிய இனத்தின் ஏக பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்
புலிகளை முற்றாக இல்லாதொழிக்கவும் திட்டமிட்டிருந்தது.

இந்திய சிறீலங்கா கூட்டுச் சதிக்குள் புதைந்து கிடந்த கபடத் தனங்களை உலகறியச் செய்யவும், அமைதிப்படையென்ற முகமூடியின்
பின்னாலிருந்த கொடிய முகத்தை தோலுரித்துக் காட்டவும் தயாராகிய இலட்சிய வேங்கையே லெப். கேணல் திலீபன் என்ற அறம்
வளர்த்த அற்புதத் தியாகி.

வரலாற்று ஓட்டத்திலே தமிழ்த்தேசிய இனமக்களாகிய எமது ஒவ்வொருவரின் இதயச் சுவரிலும் உயிர்ப்புடன் வாழும் தியாகி
லெப்.கேணல். திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலை எமது இல்லங்களிலும், நாம் வாழும் நாட்டின் ஒவ்வொரு
மாநிலங்களிலும், வாய்ப்பான பிரத்தியேகமான இடங்களிலும், ஒவ்வொரு நகரங்களிலும் மிகவும் உணர்வு பூர்வமாக
முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையிலான திட்டமிடல்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தனது பிராந்திய மற்றும் வெளியுறவுக் கொள்கை நலனுக்காக, இறைமையுள்ள ஒரு தேசிய இனத்தின்மீது, அதன் சுய விருப்புக்குப்
புறம்பாக திணிக்க முற்படுகின்ற அரைகுறைத் தீர்வுகள் உட்பட தியாகி திலீபன் அவர்களின் ஐந்தம்சக் கோரிக்கைகளுக்கு உட்பட்ட
விடயங்களில் இன்னும் தீர்வற்றுக் கிடக்கும் விடயங்களையும் இச் சமகாலத்திலே திலீபன் குரலாக உலகிற்கு உணர்த்துவோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்குப் பின்னர், விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியென்பது அரசியல்
வடிவமைப்பிற்குள் முன்னகர்த்தப்படுவதில் தியாகி திலீபன் அவர்களது அரசியல்த் தெளிவுள்ள இச் சமகாலம் மென்மேலும்
இளையோரின் அறிவாற்றலால் கூர்மைப்படுத்தப்படவேண்டியது என்ற வரலாற்று உண்மையை அவரது நினைவேந்தல்க்
காலப்பகுதியில் நாம் எல்லோரும் கடைப்பிடிக்கும் சிறந்த ஒழுங்கமைப்பால் வெளிப்படுத்துவோம்.

தெளிவற்ற அரசியல் நகர்வுகளும், உலக வல்லரசுகளின் வணிக பீடமாக மாறும் தமிழர் தேசமும், மதபேதங்களால் சூறையாடப்படும்
தமிழர் வாழ்விடங்களும், தமிழ் இளையோர்களின் தன்மான உணர்வுகளை நீர்த்துப்போகச் செய்யும் போதைப்பொருளின் உச்சப்
பாவனையும், தொல்பொருள் அடையாளங்களால் துண்டாடப்படும் நிலங்களும், ஒருபுறம் நன்கு திட்டமிட்டு நிகழ்ந்தேற, மறுபுறம்
உலகை ஏமாற்றும் நரித்தந்திரங்களை கையாளும் சிறீலங்கா ஆட்சியாளரை தியாகி திலீபன் வழியிலும் அம்பலப்படுத்துவோம்.

தனது மருத்துவபீட வாழ்வைத் துறந்து, இனமானமே பெரிதென வாழ்ந்து, உலகே வியந்த தியாகத்தின் அதிபதியான திலீபன்
அவர்களின் நினைவேந்தல்க் காலத்தை மிக உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க தயாராகுவோம்.

நன்றி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

தமிழீழ மாவீரர் பணிமனை- யேர்மனி.