நாட்டின் இருவேறு பிரதேங்களில் மனித கொலைகள்

88 0

நாட்டின் இருவேறு பிரதேங்களில் மனித கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (16) பிற்பகல் சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கல்ல பிரதேசத்தில் வீடொன்றில் ஆயுதத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வெட்டுக் காயங்களுடன் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காணி தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரனை இளைய சகோதரன் கத்தியால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்கல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 24 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனெரிலாவல வயல் பகுதியில் பரட்டாவல பாலத்திற்கு அருகில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸாருக்கு இனந்தெரியாத தொலைபேசி அழைப்பொன்று கிடைத்துள்ளது.

கனேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் தலை மற்றும் கைகளில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதுடன், இது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் மேற்கொள்ளப்பட்ட கொலை என தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவான் விசாரணை இடம்பெற்றுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (17) நடைபெறவுள்ளது.