2 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

86 0

கற்பிட்டி பகுதியில் இலங்கை கடற்படை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது 2 மில்லியன் ரூபாவுக்கும் அதிக  பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடல் மார்க்கமாக மேற்கொள்ளப்படும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி, சேரக்குளியா முனை களப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அதில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோ 955 கிராம் நிறையுடைய கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என கடற்படையினர் தெரிவித்தனர்.

மேலும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 2 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.