வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீர்மானம்

172 0

பொதுப் போக்குவரத்து சேவை மற்றும் பண்டங்கள் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படும் தெரிவு செய்யப்பட்ட சில வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை இந்த வாரத்துக்குள் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார்.

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்காக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொதுப் போக்குவரத்து சேவை மற்றும் பண்டங்கள் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படும்  சில வானங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் பஸ், லொறி மற்றும் ட்ரக் வகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட இருக்கின்றன. அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும்.

பொருளாதார நெருக்கடி காரணமாக  வாகன இறக்குமதி தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஏனினும் முக்கிய தேவை கருதி, பொதுப் போக்குவரத்து சேவை மற்றும் பண்டங்கள் போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படும்  சில வானங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.

எனினும், ஏனைய வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள், இன்னும் சில காலங்களுக்கு தளர்த்தப்பட மாட்டாது. எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்திற்கொண்டு, வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்துவதற்கு எதிர்பார்க்கிறோம் என்றார்.

இலங்கையில் அந்நிய செலாவணியில் ஏற்பட்ட தாக்கத்தை கட்டுப்பத்தி, நாட்டின் அந்நிய செலாவணியை பாதுகாத்துக்கொள்வதன் நோக்கில் அரசாங்கம் 2020 மார்ச் மாதம் வாகன இறக்குமதியை கட்டுப்படுத்த தீர்மானித்தது. அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தை அடுத்த நாட்டில் வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டதுடன் பயன்படுத்திய வாகனங்களின் விலையும் நூறுவீதம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

என்றாலும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பொருளாதாரத்தில் ஓரளவு வளர்ச்சி எற்பட ஆரம்பித்துள்ளதால், வாகன இறக்குமதியை ஓரளவு தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன் முதற்கட்டமாகவே தற்போது பொதுப் போக்குவர்ததுகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் பஸ், லொறி மற்றும் ட்ரக் வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.