நாட்டை ஆட்சி செய்த தலைவர்களும் மலையக அரசியல் தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும்

58 0

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை ஒரு இடத்தில் மாத்திரம் முடங்கிக் கிடப்பதற்கு நாட்டை ஆட்சி செய்த தலைவர்களும், மலையக அரசியல் தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும். 200 ஆண்டுகாலமாக இந்த நாட்டுக்காக ஓடாக தேயும் மலையக மக்களுக்கு காணி உரிமை இல்லை என்பதையிட்டு அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (10) இடம்பெற்ற பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பெருந்தோட்ட மக்கள் தொழில் நிமித்தம் தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டார்கள். காலனித்துவ ஆட்சி,சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் 1948 ஆம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டம், 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம், 1971 ஆம் ஆண்டு ஏப்ரல்  கிளர்ச்சி, தோட்ட தேசியவாதம்,1973 ஆம் ஆண்டு உணவு பஞ்சம்,1977,1981 மற்றும் 1983 ஆம் காலப்பகுதியில் இடம்பெற்ற இன கலவரம், 30ஆண்டுகால யுத்தம் ஆகியவற்றால் எமது பெருந்தோட்ட மக்கள் பாதிக்கப்பட்டார்கள்.

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை ஒரு இடத்தில் மாத்திரம் முடங்கிக் கிடப்பதற்கு நாட்டை ஆட்சி செய்த தலைவர்களும்,மலையக அரசியல் தலைவர்களும் பொறுப்புக்கூற வேண்டும். 200 ஆண்டுகாலமாக இந்த நாட்டுக்காக ஓடாக தேயும் மலையக மக்களுக்கு காணி உரிமை இல்லை என்பதையிட்டு அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட காணி உரிமை,தொழில் உரிமை,கல்வி,சுகாதாரம்,அரச தொழில்வாய்ப்பு என்பன தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. சுதந்திரத்துக்கும் பின்னரான காலப்பகுதியிலும் பெருந்தோட்ட மக்கள் இன்றும் லயன் அறைகளில் தான் வாழ்கிறார்கள்.நல்லாட்சியில் காலத்தில் தான் அதிக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு காணி உரிமை வழங்கப்பட்டது.

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசும் போது சபையில் அமைச்சர்களும் இல்லை, இராஜாங்க அமைச்சர்களும் இல்லை ஆகவே இவர்கள் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து அக்கறையில்லை என்பதை வெளிப்படுத்துகிறது என்றார்.

இதன்போது குறுக்கிட்டு உரையாற்றிய நீர்பாசனத்துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அரசாங்கத்தின் அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள் சபையில் இல்லை ஆகவே அவர்களுக்கு பெருந்தோட்ட மக்கள் குறித்து அக்கறை இல்லை என்று குறிப்பிடுகின்றீர்கள்,மலையக மக்களின் பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தையில் ஈடுபட ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

தனிப்பட்ட ஒருசில நிரல்படுத்தல்களுக்காக மலையக அரசியல்வாதிகள் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க முயற்சிக்கிறார்கள். அவ்வாறாயின் பெருந்தோட்ட மக்கள் குறித்து மலையக அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லையா என கேள்வி எழுப்பினார்.

மீண்டும் தனது உரையை தொடர்ந்து உதயகுமார் பெருந்தோட்ட அபிவிருத்தி மாத்திரம் தான் காலையில் சபையில் இருந்தார் தற்போது அவரும் இங்கு இல்லை.ஜனாதிபதியின் செயற்பாடு எவ்வாறு என்பதை நாங்கள் அறிவோம்.எனக்கு குறுகிய நேரம் வழங்கப்பட்டுள்ளது.ஆகவே நான் அதை விபரிக்கவில்லை.மலையகத்தில் கல்வி,சுகாதாரம்,உட்பட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.அவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.

நுவரெலியா,ஹட்டன் ஆகிய பகுதிகளின் கல்வி வலயங்களில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.ஆகவே பெருந்தோட்டங்களில் கல்வி துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.