தமிழீழக் காற்பந்தாட்ட அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுதலும்.-தமிழர் ஒருங்கிணைப்புக் குழு- யேர்மனி.

197 0

                                                                                                                                                                                                                                                                                     10.08.2023

அனைத்துலகக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்புரிமையற்ற அங்கீகரிக்கப்படாத நாடுகள், நாடற்றோர், சிறுபான்மையினம் மற்றும் சிறுபிராந்தியங்கள் ஆகியனவற்றின் தேசிய காற்பந்தணிகள் அங்கத்துவம் வகிக்கும் சுவீடனைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் சுயாதீன காற்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பு (CONIFA) ஆசியக் கிண்ணத்துக்கான சுற்றுப்போட்டியை போத்துக்கல்லின் அல்கோசெரே (Alcochete) நகரில் ஓகஸ்ட் 3ஆம் நாளிலிருந்து 8ஆம் நாள்வரை நடாத்தியமை அனைவரும் அறிந்ததே. அந்தக் காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டியிலே தமிழீழக் காற்பந்தாட்ட அணியும் பங்குபற்றி வெற்றிக்கிண்ணத்தைத் தமதாக்கி வாகைசூடியது.

தமிழினம் ஏதிலியாகித் தன்னிலை இழந்து இனமென்ற இருப்பைத் தொலைத்து அழிந்துவிடும் என்ற இனஅழிப்புச் சிந்தனையோடு சிங்கள இனவாத அரசுகள் தமிழினத்தைத் தாயகத்திலிருந்து துடைத்தழித்துவிடும் நோக்கிலே கட்டாயப் புலப்பெயர்வுச் சூழலைத் தோற்றுவித்தது. உலகெங்கும் ஏதிலியாகப் புலம்பெயர்ந்த தமிழினம் மொழி, கலை, பண்பாடு, விளையாட்டு எனத் தன்னைத் தகவமைத்துக் கொண்டதோடு தமிழீழ விடுதலையையும் தனது இதயத்திலே சுமக்கும் வரலாற்றுக் கடமையையும் தம்மோடு இணைத்துக்கொண்டு செயற்படலானது.
அதன் பயனாகப் புலத்திலே பிறந்து வளர்ந்து பதியமாகிவரும் எமது இளைய தலைமுறையிடமும் தமிழீழ விடுதலையென்னும் உயர் இலட்சியம் மேலெழுந்து நிற்பதன் சாட்சியாகத் தமிழீழக் காற்பந்தாட்டஅணி திகழ்கின்றது.

தமிழீழக் காற்பந்தாட்ட அணி இந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியதன் வாயிலாகத் தமிழீழத் தாயகத்துக்குப் பெருமையையும் புகழையும் பெற்றுக்கொடுத்ததோடு, தமிழீழ தாயகத்திற்கு அனைத்துலக பரிமாணத்தையும் ஏற்படுத்தியுள்ளமை சிறப்பிற்குரியது. இச்சிறப்பிற்குரிய தமிழீழக் காற்பந்தாட்ட அணியின் வெற்றிக்காக உழைத்த அனைவரையும் யேர்மன்வாழ் தமிழ்உறவுகளோடு இணைந்து பாராட்டுவதோடு, வாழ்த்துவதில் நாம் நிறைவடைகின்றோம்.

– நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்-
தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.