தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடித்த 38 பேரை பொலிஸாரிடம் ஒப்படைத்த மக்கள்

129 0

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடித்த 38 சிங்கள மொழி பேசும் மீனவர்களையும், அவர்கள் மீன்பிடிப்பதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் அப்பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அதனை தொடர்ந்து, 38 பேரில் நால்வர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, மேலும் இருவர் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினருக்கும் குறித்த பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை (05) பிற்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் சார்ந்து தெரியவருவதாவது,

தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில், வெலிஓயா பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினர் அத்துமீறி  மீன்பிடியில் ஈடுபட்டது தொடர்பில் மீனவ சங்கத்தினருக்கும் பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 38 சிங்கள மொழி பேசும் மீனவர்களையும், அவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் குறித்த பகுதி மக்கள் ஒட்டுசுட்டான் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதனையடுத்து, ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்களில் நான்கு பேர் பொலிஸாரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர், பதிவு செய்யப்பட்ட கிச்சிராபுரம், தண்ணிமுறிப்பு சங்கத்தினை சேர்ந்த இருவர் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

 

அதனை தொடர்ந்து, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, மீனவர்களிடம் முழு விபரங்களையும் கேட்டறிந்ததோடு, சம்பவம் தொடர்பில் உடனடியாக உரியவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தண்ணிமுறிப்பு நன்னீர் மீன்பிடியால் தமிழ் மற்றும் சிங்கள மீனவர்களுக்கு இடையில் முறுகல் நிலை அவ்வப்போது தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.