தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை யேர்மனிய வாழ் ஈழத்தமிழர்கள் மறந்துள்ளார்களா? -ஈழத்துச் சுந்தர்.

463 0

தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை யேர்மனிய வாழ் ஈழத்தமிழர்கள் மறந்துள்ளார்களா?
இந்திய மற்றும்  இலங்கை அரச இயந்திர நிகழ்ச்சி நிரலுக்குள் ஏ .ஆர். ரஹ்மான் சிக்கியுள்ளாரா ?

யேர்மனிய நாட்டில் எதிர் வரும் 23.09.2023 அன்று, ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அகிம்சைய வழியில் ஆகுதியாகிய பெரும் தியாகி லெப்டினன்ட் கேணல். திலீபன் அவர்களின் 36 வது ஆண்டு நினைவெழுச்சியின் 9ஆம் நாளிலேஇந்திய பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்ச்சி விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளதை காணும் போது கவலையழிக்கிறது.

ஈழத்தமிழர்கள் கண்ணீரில்க் கலக்கும் காலத்தில் அவர்களின் முதுகில்  வென்நீரை ஊற்றுவது போல்லுள்ளது  எங்கள் வேதனை.உலகத்தமிழினமே! உணர்வெழுச்சி கொண்டு உண்ணா நோன்பு அனுஸ்டிக்கும் காலத்தில் இந்த இசைக் கூத்தும் குத்தாட்டமும் எதற்கு எமக்கு? புலம்பெயர்ந்து யேர்மனியில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழர்களே! தமிழக தமிழர்களே!! தியாகி திலீபனை, அவரது மெய்  கூச்செறியும் தியாகத்தை  மறந்து போனீர்களா?தமிழினம் சுதந்திரம் அடையவும், தமிழ்மொழி காக்கவும்,தன்னை அணுவணுவாக  12 நாட்கள் உருக்கினாரே! அந்த நினைவுகள் உங்கள் நினைவினில் இல்லையா?

ஏற்கனவே  வீரச்சாவடைந்த 650 மாவீரர்களோடு நானும் வானத்திலிருந்து ஈழம்  மலர்வதைப் பார்ப்பேன்  என ஆசை கொண்டுதானே இன்னுயிரை  ஈகம் செய்தார். அவர் உங்கள் பிள்ளை இல்லையா? அவர் ஈகம் பெரிதில்லையா? உங்களுக்கு  இன மானம் இல்லையா? அல்லது இனம் பெரிதில்லையா? திலீபன் நினைவு நிகழ்வுகளை மறுத்து இசையமைத்து இலாபம் தேடவேண்டுமா?

இப்படி ஒரு வியாபாரம் செய்து ஈழத்தமிழரின் பணத்தைப் பெற்று நீங்கள் வாழவேண்டுமா? இதை எம் இனம் பார்த்து மகிழுமா? யேர்மனிய வாழ் ஈழத்தமிழர்களே ஆழ்மனதிலிருந்து சிந்தியுங்கள்.எதிரியும் ஏளனம் செய்வான் இதைபார்த்து. போராடிய சமூகமாக நாங்கள் இன்னும் அகதி முகாம்களிலே இருந்தபடியே, பார்க்க வேண்டுமா இந்த நாகரீகமற்ற  கூத்தை?
இதயம் திறந்திருக்கட்டும் இமைப்பொழுதில்  எம்முறவுகளே! இவ்வுலகில் அகிம்சையின் அடையாளம் காந்தி அடிகளே என்று சொன்ன, பாரத தேசம் ஈழத்தமிழ் இனத்தின் அகிம்சையின் அடையாளமாகிய  தியாகி திலீபன் அவர்களின் தியாகத்தை வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல, அவரது ஈகத்தின் பின்னே பாரதம் தலைகுனிந்ததும் வரலாறு.

அந்த தியாக வரலாற்றை யாரும் அழிக்க முடியாது. அது வானுயர எழுதப்பட்ட வரலாறு. இன்றுவரை உலகம் வியந்து நிற்கும் ஒரு வீர வரலாறு. இன்று வரை ஈழத்துயரில் களத்தினில் பங்கு கொள்ளும் எம்  உலகத் தமிழ் புலம் பெயர் உறவுகளே! யேர்மன் வாழ் ஈழத்தமிழர்களே!! உங்கள் இதயத்தை இந்தக் காலத்தில் அந்த உன்னதனுக்காக, திறந்து வையுங்கள். நாம் ஆழ வேரறுந்து விழுந்துவிடக் கூடாது. ஏனெனில் உங்கள் நிழலில்த்தான் இன்று எம் தாயகம் மூச்சை இழுத்து விடுகிறது.

இந்த இசைக் களியாட்டத்தை ஒழுங்கு படுத்தும் வியாபார விசமிகளுக்கு உங்கள் விடுதலைப்பற்றை, தன்மான உணர்வை மீண்டும் வெளிப்படுத்துங்கள். இந்த விசமிகளை அறச்சீற்றத்தோடு விரட்டியடியுங்கள். நீங்கள் புலம்பெயர்ந்த சமூகமானாலும் தமிழீழத் தனியரசின் பிரதிநிகளாய் இழிவானோரை திருத்தி வழிநடத்துங்கள். உண்ணாவிரதக் காலத்தை உணர்வோடும், தூய்மையோடும் தாங்கிநின்று, மாவீரர்களின் பெருந் துணையோடு உறுதிகொள்ளுங்கள். இது உங்கள் காலத்தின் கடமை. கட்டாயம் செய்வீர்களென நம்பிக்கை கொள்கிறோம்.

தாய்நாட்டின் சுகமிழந்து, இயல்பு வாழ்வின்றி, இந்தோனேசிய அகதி முகாம்களில் இன்னும் அல்லலுறும் நாங்கள், ஈழத்தமிழர் என்ற உணர்வை மட்டும் குலையாது வைத்துள்ளோம். நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒற்றை நம்பிக்கையில்.

நன்றி,
நிறைந்த வலியோடு,
ஈழத்துச் சுந்தர்,
தமிழீழ அகதிகள் சார்பாக,
இந்தோனேசியா.
04.08.2023.