பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் ”என் மண்-என் மக்கள்” பாதயாத்திரை நேற்று மதுரை மாவட்டத்தை அடைந்தது. நேற்று மேலூர் அரசு கலைக்கல்லூரியில் பாதயாத்திரை தொடங்கியது. அண்ணாமலைக்கு மேள-தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
சந்தைப்பேட்டை, பெரிய கடை வீதி வழியாக மேலூர் பஸ் நிலையம் வந்தடைந்தார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அண்ணாமலை பேசியதாவது:- தமிழக மக்கள் நல்லவர்கள், வல்லவர்கள். ஆனால், திராவிட மாயையில் அகப்பட்டு கிடக்கிறார்கள். அவர்களை மீட்பதே பாதயாத்திரையின் நோக்கம். தி.மு.க. கூறும் பொய்களை தோலுரித்து காட்டிவருகிறோம்.
தமிழகத்தில் நேர்மையான, மிக சிறந்த ஆற்றல் மிகுந்த அரசியல்வாதியான கக்கனை அறிமுகப்படுத்தியது மேலூர்தான். ஆனால், தற்போதுள்ள அமைச்சர் கரூர் செந்தில் பாலாஜி, கக்கனுக்கு நேர் எதிரானவர். நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து, தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றவர் செந்தில்பாலாஜி. அப்படி என்றால் அரசு டாக்டர்களும், அரசு மருத்துவமனையும் சரியில்லையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், கக்கன் வாழ்நாள் முழுவதும் அரசு ஆஸ்பத்திரியில்தான் சிகிச்சை பெற்றார்.
செந்தில் பாலாஜியை போல் அமைச்சர் மூர்த்தி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். என் குலதெய்வத்தின் மீது ஆணையாக எனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

