பாராளுமன்ற கூட்டம் 8 ஆம் திகதி ஆரம்பம்

175 0

பாராளுமன்றம் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் கடந்த ஜூலை 21ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கமைய 2023ஆம் ஆண்டுக்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.

ஆகஸ்ட் 9ஆம் திகதி புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர், 5 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கமைய சபை ஒத்திவைப்பு வேளையின்போதான விவாதம் இடம்பெறவுள்ளது.

ஆகஸ்ட் 10ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கமைய பெருந்தோட்ட சமூகம் தற்போது எதிர்கொள்ளும் சமூக, பொருளாதார பிரச்சினைகள் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளது.

ஆகஸ்ட் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.