தையிட்டி விகாரை விவகாரத்துக்கு ஒவ்வொரு போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் எந்தவிதமான தீர்வும் கிடைக்கப்போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் இன்று (02.08.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுமுகமான தீர்வைக் காண்பதற்கான முழு முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றார் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் குறிப்பிடுகையில் ,
அண்மையில் தையிட்டி விகாரைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் இவ்விகாரை அமைந்துள்ள காணி தொடர்பாக விகாராதிபதி, படைத்தரப்பு குறித்த பிரதேசத்தின் பிரதேச செயலாளர் மற்றும் காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடியிருந்தார். அதனடிப்படையில் விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் அதைச் சூழவுள்ள காணிகள் தொடர்பில் விகாராதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.
அதேபோன்று குறித்த காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
இவ்விரு தரப்பினரது கருத்தக்களின் அடிப்படையில் சுமுகமான ஒரு தீர்வை எட்டுவதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துவரும் நேரத்தில் அதற்கு குந்தகம் விழைவிப்பதற்காக அரசியல் குழுவின் சிலர் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் விகாரையை அண்மித்துள்ள பகுதிக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பி தமது அரசியல் சுயலாபத்தை தேடிவருகின்றனர்.

