ஜோன் பிள்ளையின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய இருவருக்கு சிறை

243 0

ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுர மாவட்ட முன்னாள் முகாமையாளர் வைத்தியர் ராஜா ஜோன் பிள்ளையின் வீடு மற்றும் வைத்திய மத்திய நிலையத்திற்கு தீ வைத்து பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு பத்தொன்பதறை வருடங்கள் (19 வருடங்களும் ஆறு மாதங்களும்) கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மிஹிந்தலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான அனில் புஸ்பானந்த மற்றும் காமினி ஜெயசூரிய ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு வட மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பேரணியில் சென்ற சிலரால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அறுவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன், மற்றைய சந்தேகநபர்களில் மூவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.