சிறைகளில் உயிர்நீத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு நினைவேந்தல்

68 0

யாழ்ப்பாண மாவட்ட குரலற்றவர்களின் குரல் அமைப்பின் எற்பாட்டில், சிறைகளில் சாவினை தழுவிய  54 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நினைவேந்தலானது நேற்று (31.07.2023) யாழ்ப்பாணம் – குருநகர் புதுமை மாதா தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள வாஸ்து தலத்தில் இடம்பெற்றுள்ளது.

மத ஆசி உரைகளை வழங்கு வதற்காக யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர்  செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், யாழ்ப்பாண மாவட்ட பங்கு குருமுதல்வர் ப.ஜெயபரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் சிறைகளில் சாவினை தழுவிய குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகிய 54 தமிழ் அரசியல் கைதிகளின் உருவப்படத்திற்கான பிரதான சுடரை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் ஏற்றியுள்ளார்.பின் மலர்மாலையினை யாழ்ப்பாண மாவட்ட பங்கு குருமுதல்வர் ப.ஜெயபரட்ணம் அணிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நினைவேந்தல் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் நினைவேந்தல் மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டுள்ளது.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், அரசியல் கைதிகளாக இருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள், சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள், குடும்ப உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டு நினைவேந்தலினை செலுத்தியுள்ளனர்.

இதே வேளை,சிறைகளில் சாவினைத்தழுவிய தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல் குறித்து குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில்  சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உயிர்நீத்த அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி காணப்படுகிறது. இதனை தீர்ப்பதற்கு எம் நாட்டில் வசிக்கும் உறவுகளும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளும் பொருளாதார ரீதியாக உதவி செய்வதற்கு முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.