உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதனால் ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது. மாற்றம் ஏற்படுவதற்குக் காலம் எடுக்கும்.
இலங்கையின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபின் உள்ளடக்கம் என்னவென்று எமக்குத் தெரியாது.
இருப்பினும் இவ்விடயத்தில் நாம் நடுநிலையாகவே செயற்படுகின்றோம் என்று தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் ஸ்தாபிப்பதற்கு உத்தேசித்திருக்கும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினர் அறிவித்திருக்கும் நிலையில், எவ்வித நம்பகத்தன்மையும் அற்ற இந்நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டுமெனப் பெரும் எண்ணிக்கையான சிவில் சமூகப்பிரதிநிதிகளும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை இலங்கைக்கு வழங்கிவரும் தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் மற்றும் தூதுவர்களான (முறையே) சன்டைல் எட்வின் ஸ்கால்க், டொமினிக் ஃபக்ளெர் மற்றும் மிஸுகொஷி ஹிடேகி ஆகியோருக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் மேற்குறிப்பிட்ட இராஜதந்திரிகளின் அழைப்பின்பேரில் கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பில் இளங்கோவன், பவானி பொன்சேகா, ஷ்ரீன் ஸரூர், வின்யா ஆரியரத்ன, ஜெஹான் பெரேரா, மகாலக்ஷ்மி மற்றும் ஜுவேரியா ஆகியோர் உள்ளடங்கலாக சிவில் சமூகப்பிரதிநிதிகள் 15 பேர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது அரசாங்கத்தினால் கடந்த காலங்களில் பல ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும், அவற்றின் செயற்பாடுகளால் எவ்வித பயனும் கிட்டவில்லை என்று இராஜதந்திரிகளிடம் சுட்டிக்காட்டிய சிவில் சமூகப்பிரதிநிதிகள், எனவே அதன் நீட்சியாகத் தற்போது அரசாங்கம் ஸ்தாபிப்பதற்குத் திட்டமிடும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்மீது தமக்கு எவ்வித நம்பிக்கையோ அல்லது எதிர்பார்ப்போ இல்லை என்றும் தெரிவித்தனர்.
குறிப்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் இதுவரையில் எந்தவொரு விசாரணையும் உண்மையைக் கண்டறியக்கூடியவகையில் முறையாகப் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும், அதன் விளைவாக இக்கட்டமைப்புகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டிருக்கின்றது என்றும் இராஜதந்திரிகளிடம் சுட்டிக்காட்டிய அவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினரும் அவர்களுக்கு ஆதரவாக செயற்படுவோரும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாவதாகவும் முறையிட்டனர்.
அதற்குப் பதிலளித்த இராஜதந்திரிகள் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களைத் தாம் இலங்கைக்கு வழங்கிவருகின்ற போதிலும், அந்த ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபின் உள்ளடக்கம் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டனர். எனவே உத்தேச ஆணைக்குழு தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகளின் நிலைப்பாடு என்னவென்பதைக் கேட்டறிந்து, அதற்கமைவாக அரசாங்கத்திடம் சில நிபந்தனைகளை முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.
மேலும் ‘ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது. மாறாக இச்செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கும், அதன்மூலம் மாற்றம் ஏற்படுவதற்கும் காலம் எடுக்கும்’ என்று ஜப்பான் தூதுவரும், ‘தென்னாபிரிக்காவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை இயக்கும் செயன்முறை மிகவும் கடினமானதாகக் காணப்பட்டது. தற்போது இலங்கையின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுச் சட்டவரைபின் உள்ளடக்கம் பற்றி எமக்குத் தெரியாது. இவ்விடயத்தில் நாம் நடுநிலையாகவே செயற்படுகின்றோம். உங்களிடம் பேசுவதைப்போன்றே அரசாங்கத்திடமும் பேசுவோம்’ என்று தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் கூறினர்.
இருப்பினும் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதை சிவில் சமூகப்பிரதிநிதிகள் மீண்டும் அழுத்தம் திருத்தமாக இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்தனர்.

