உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சுவிற்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் பயிற்சிப்பட்டறை

150 0
இலங்கையிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்குப் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நிலையில், அதற்கு தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வெவ்வேறு அடிப்படைகளில் ஒத்துழைப்புக்களை வழங்கிவருகின்றன.

அதன் ஓரங்கமாக அண்மையில் மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளினதும் இராஜதந்திரிகள் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனும், அதன் பின்னர் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது இலங்கையிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகம் தெரிவுசெய்யப்பட்ட சிவில் சமூகப்பிரதிநிதிகள் சிலருக்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அறியமுடிகிறது.

குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுடன் நெருங்கிப்பணியாற்றுவோர், வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் இயங்கிவருவோர் உள்ளிட்ட 10 பேருக்கு இப்பயிற்சிப்பட்டறையில் பங்கேற்பதற்கு அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் பகிரங்கமாகவே அறிவித்திருக்கும் பின்னணியிலேயே இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.