எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புத்திஜீவிகள் பங்கேற்கும் ஊடக சந்திப்பு சனிக்கிழமை (29) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு இவ்வாறு கூறிய பேராசிரியர் ஆனந்த ஜயவிக்ரம மேலும் தெரிவிக்கையில்,
இந்தியாவின் உப மாநிலமாக இலங்கையை மாற்ற முயற்சிக்கின்றனர். பாலத்தை நிர்மாணிப்பதால் இந்தியாவின் நலன்களே நிறைவேறும். இலங்கையின் தேவைப்பாடுகள் பாலம் நிர்மாணிப்பதால் நிறைவேறாது.
இலங்கையின் தேவைப்பாட்டுக்காகவன்றி, இந்தியாவின் தேவைப்பாட்டுக்கு ஏற்பவே இந்த பால நிர்மாண விடயம் கையாளப்படுகிறது. இதனால் இலங்கையின் நலன்களை விட இந்தியாவின் நலன்களே மேலோங்கும்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் 6.7 வீதமானோர் தொழிலற்று இருக்கின்றனர். நாளாந்தம் வேலைவாய்ப்பை இழக்கும் தொகை அதிகரித்து வருகிறது.
2022 இறுதியில் 5.5 மில்லியன் மக்கள் புதிதாக வறுமைக்குட்பட்டுள்ளனர். இது 27.4 வீதமாக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பொருளாதாரம் சரியான நிலைப்பாட்டுக்கு இன்னும் வரவில்லை. ஜனாதிபதி இதற்குண்டான தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதாக புலப்படவில்லை.
அஸ்வெசும பெறச் சென்று உயிரிழக்கின்றனர். ஜீவனோபாயத்தை நடத்த தேவையான ஒழுங்கில் பொருளாதார வளர்ச்சி நாட்டில் நடைபெறுவதாக இல்லை. அதிகாரத்தை பெறும் நோக்கிலான பொறுப்பற்ற விதமாக அரசியல் விளையாட்டிலேயே தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் மொட்டுக் கட்சியும் ஈடுபட்டுள்ளன.
பொருளாதாரத்துக்கு தீர்வாக அதானி போன்ற சர்வதேச மட்டத்தில் வட்டிக்கு பணம் வழங்குநர்களிடம் தேசிய வளங்களை விற்பதே இந்த அரசாங்கத்தின் கொள்கையாக மாறியுள்ளது.
சர்வதேச நாடுகளின் அதிகார போட்டியில் இலங்கை சிக்கியுள்ளது. பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்கு முற்றிலும் மாறான செயற்பாட்டையே ஜனாதிபதி மேற்கொள்கிறார்.
கல்விச் சீர்திருத்தம் தேவை என்றாலும், கல்விச் சீர்திருத்தம் என்ற போர்வையில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை இல்லாமல் செய்வதற்கு தற்போதைய தேசிய முன்னுரிமை வழங்கப்படுகிறது.
தொடர்ச்சியாக தேர்தலை காலம் தாழ்த்தி, சர்வ கட்சி மாநாட்டை நடத்தி, மக்களையும் சர்வதேச தலைவர்களையும் இந்தியாவையும் ஏமாற்றும் நடவடிக்கையிலேயே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வெட்கமின்றி ஈடுபட்டு வருகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலையேனும் நடத்துமாறு இந்திய பிரதமர் ஜனாதிபதிக்கு தெரிவித்தமை இலங்கையின் நன்மதிப்புக்கே களங்கம் ஏற்படுத்தியுள்ளது.
நாடும் நாட்டு மக்களும் நாமும் எதிர்பார்த்த போக்கில் நாட்டின் பொருளாதார மீட்சி இடம்பெறுவதாக இல்லை. அதற்கான உண்மையான காரண காரிய செயற்பாட்டிலான பிரவேசத்துக்கு செல்வதாக இல்லை. பொருளாதார மீட்சிக்கு தேசிய வளங்களை விற்பது தீர்வாகாது; நாடுகளுக்கு ஏலம் விடுவதும் தீர்வாகாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

