வவுனியா வீரபுரத்தில் தமது காணிகள் பறிபோவதாக மக்கள் ஏக்கம்

217 0
வவுனியா மாவட்டம் வீரபுரம் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக பிறேமதாச அரசினால் வழங்கப்பட்ட. 2 ஏக்கர் நிலத்தினையும் மைத்திரிபால அரசினால் அபகரிக்கத் திட்டமிடப்படுவதாக வீரபுரம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பினில் வீரபுரம் கிராம மக்கள் மேலும் தெரிவிக்கையில் ,
வவுனியா மாவட்டத்தினின் வென்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வீரபுரம் கிராமத்தில் 200 குடும்பங்களிற்கு  வீதியை அண்டிய பகுதியில் 4 பரப்புக் காணிகளில் பிறேமதாச அரசின் ஆட்சிக்காலத்தில் வீடுகள் அமைத்து தரப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட குடியேற்றத் திட்டத்தின் வாழ்வாதாரத்திற்காக வீரபுரம் எல்லைப்பகுதியில் தலா 2 ஏக்கர் நிலம் வீதம் 400 ஏக்கர் காணி வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்டது.
இவ்வாறு வழங்கப்பட்ட நிலத்தினை நம்பியே 1990ம் ஆண்டுவரை கமத்தொழில் ஈடுபட்டு வாழ்வாதாரத்தினை நடாத்தி வந்தோம்.்இருப்பினும் 1990ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தபோது குறிப்பிட்ட நிலங்களையும் கைவிட்டு இடம்பெயர்ந்தோம். அதன் பின்னர் அச்சம் காரணமாக அப் பகுதிக்கு திரும்பவில்லை. இதன்பின்னர் யுத்தம் வலுப்பெற்றபோது அப்பகுதியில் ஊர்காவற் படையினர் முகாமிட்டதன் காரணமாக குறித்த பிரதேசத்தினை சென்று பார்வையிடவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் யுத்தம் முடிந்து 7 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் எமது சொந்தக் கிராமங்களிற்குத் திரும்பி வருகின்றோம். இருப்பினும் எமது வாழ்வாதார நிலங்கள் விடுவிக்கப்படாதமையினால் ஏனைய குடும்பங்கள் சொந்த இடத்திற்குத் திரும்ப முன்வருவதில்லை. இதனால் எமக்குச் சொந்தமான வாழ்வாத நிலத்தினை பெற்று தோட்டச் செய்கையில் ஈடுபட முனைந்தவேளையில் தற்போது ஊர்காவற்படையினர் மீண்டும் தடைபோடுகின்றனர்.
இவ்வாறு தடைபோடும் ஊர்காவற்படையினர் எமது காணியில் 50 ஏக்கர் நிலத்தை அபகரித்தே நிலைகொண்டிருக்கும் நிலையில் எஞ்சிய நிலத்தை அபகரித்து அந்த முகாமில் நிலைகொண்டுள்ள ஊர்காவற்படையினரின் குடும்பங்களிற்கு வழங்கி அவர்களின் குடும்பங்பளை குடியமர்த்தும் முயற்சி எடுக்கப்படுகின்றது. எனவே இதனை தடுக்குமாறு நாம் வவுனியா மாவட்ட தமிழரசுக் கட்சியின் தலைவரும் வட மாகாண சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கத்தின் உதவியை நாடினோம்.
அதன் பிரகாரம் ஊர்காவற்படையினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த துப்பரவுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டது. இதனால் எமது நிலத்திற்கு பார்வையிட நேற்றைய தினம் ணென்றோம். அதன்போதும் ஊர்காவற் படையினர் தலையிட்டு எம்மை விரட்டுகின்றனர். இதனால் குறித்த விடயம் தொடர்பில் மீண்டும் சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதேநேரம் எமது நிலத்தை அபகரித்து ஊர்காவற் படையினருக்கு வீடுகள் அமைத்து வழங்கும் பணியினை வவுனியா தெற்கு பிரதேச செயலகமே முன்னெடுப்பதாகவும் கூறப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்தின் வீரபுரம் கிராமமானது செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் கீழேயே வருகின்ற கிராமம் ஆகும். அந்த வகையில் இப் பிரதேசத்திற்கான பணிகளை செட்டிகுளம் பிரதேச செயலாளரே முன்னெடுக்கவேண்டும்.  ஆனால் இதில் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் நேரடியாகத் தலையிடுகின்றமையும் எமக்கு சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. என்கின்றனர்.
இவ்வாறு வீரபுரம் கிராம மக்களினால் தெரிவிக்கப்படும் விடயம் தொடர்பினில் செட்டிகுளம் பிரதேச செயலாளரைத் தொடர்பு  கொண்டு அப்பகுதியில் உள்ள ஊர்காவற்படை முகாமை அண்டிய பகுதியில் தற்போது குடியேற்றத்திற்கான முயற்சிகள் இடம்பெறுவதோடு அப்பகுதி வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரதேசத்திற்குள் வருவதாக கூறப்படுவது தொடர்பில் கேட்டபோது ,
அப்பகுதியில் தற்போது எந்தவிதமான பணிகளும் இடம்பெறவில்லை.இருப்பினும் குறித்த பகுதியில் ஊர்காவற் படை முகாம் உள்ளது. இருப்பினும் குறித்த பிரதேசமானது செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குள்ளேயே அடங்கும் கிராமம் என்றார்.