இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் திங்கட்கிழமை (24) இரவு தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 2 படகையும் அதிலிருந்த 9 தமிழக மீனவர்களையும் கைது செய்தனர்.
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி தளத்தில் இருந்து திங்கட்கிழமை (24) காலை 267 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றன.
குறித்த படகுகள் நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று அதிகாலை கரை திரும்பின. அப்போது, கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகள், அதில் இருந்த 9 மீனவர்களை கைதுசெய்தனர்.
விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே சுந்தரமுடையான் தில்லை நாச்சியம்மன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த வேலு என்பவரின் படகில் சென்ற சுரேஷ் (38), ஆறுமுகம் (49), மணிகண்டன் (43), குமார் (37), உச்சிப்புளி அருகே வட்டான்வலசையைச் சேர்ந்த நாகநாதன் என்பவரின் படகில் சென்ற ஜெயசீலன் (55), நல்லதம்பி, வேல்முருகன் (52), முத்திருளாண்டி (58) ஆகியோர் என தெரியவந்தது.
கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களையும் அவர்களின் 2 விசைப்படகுகளையும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு சென்று, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

