முஸ்லிம் இளம் பெண் பாடகிக்கு சமயத் தலைவர்கள் ‘பத்வா’; பாதுகாப்பு வழங்க முதலமைச்சர் உறுதி

331 0

பொது மேடைகளில் பாடிவரும் அஸ்ஸாமைச் சேர்ந்த முஸ்லிம் இளம் பெண்ணுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதையடுத்து, அவருக்கு பாதுகாப்பு வழங்க அம்மானில அரசு உறுதியளித்துள்ளது.

நாஹித் அஃப்ரின் என்ற அந்தப் பெண் இரண்டு வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியின் பாடல் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றவர். இதனால், தமது நிகழ்ச்சிகளில் பாடுமாறு பல இசைக்குழுக்கள் அவருக்கு அழைப்பு விடுத்தன. அந்த அழைப்புக்களை ஏற்று அஃப்ரின் பல நிகழ்ச்சிகளில் பாடிவருகிறார்.

எனினும், அண்மையில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் சமயத் தலைவர்கள் அவருக்கெதிராக ‘பத்வா’ (மார்க்கத் தீர்ப்பு) விடுத்ததையடுத்து, அஃப்ரினுக்கு போதிய பாதுகாப்பு வழங்க அஸ்ஸாம் மானில அரசு உறுதியளித்துள்ளது.

இதுபற்றி கருத்துத் தெரிவித்த அஸ்ஸாம் மானில முதல்வரும் பா.ஜ.க. தலைவருமான சர்பானந்தா சோனோவால், இதுபோன்ற இளம் தலைமுறையினரின் திறமைகளை மழுங்கடிக்கச் செய்யும் இதுபோன்ற செயல்களைத் தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், அஃப்ரினைத் தொடர்புகொண்டு அவருக்கு அரசின் பாதுகாப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுபற்றிப் பேசியி அஃப்ரின், இதுபோன்ற மிரட்டல்களைக் கேட்டு தாம் முதலில் மனமுடைந்ததாகவும், ஏற்கனவே இசைத் துறையில் இயங்கிவரும் பல முஸ்லிம் கலைஞர்களின் வாழ்க்கை தனக்கு ஊக்குவிப்ப அளித்திருப்பதாகவும், இனிமேல் எக்காரணம் கொண்டும் இசைத்துறையை விட்டு விலகப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.