கடத்தப்பட்ட கப்பலில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

219 0
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் எண்ணெய் கப்பலில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சோமாலிய கடற்கொள்ளையர்களால் நேற்று கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலில் இலங்கையர்கள் 8 பேர் சேவையாற்றுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே வெளிவிவகார அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்ட வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுடன் கடற்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தொடர்ச்சியாக தொடர்பில் உள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தியவுடன், அந்தக் கப்பலில் சேவையாற்றுபவர்களின் பாதுகாப்புக்கு பாதகம் ஏற்படாத வகையில் தகவல்களை வழங்க எதிர்பார்ப்பதாக் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடத்தப்பட்டதாகக் கூறப்படும் கப்பல் டுபாய் நிறுவனம் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட கப்பல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கப்பலை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பா சங்கத்தின் கடற் படையணி தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்து கப்பலில் உள்ள தமது உறவினரைக் காப்பாற்றுமாறு, குறித்த கப்பலில் உள்ள சேவையாளரின் உறவினர் ஒருவர் எமது செய்திச் சேவையிடம் கருத்து வெளியிட்டபோது கோரிக்கை விடுத்துள்ளார்.