உதவித்தொகை கிடைக்காமல் அல்லலுறும் இலங்கை அகதிகள்

279 0

தமிழக அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள், மூன்று மாதமாக உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர் என செய்திகள் வௌியாகியுள்ளன.

சென்னை புழல் அடுத்த காவாங்கரையில், இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. அதில், 352 குடும்பங்களைச் சேர்ந்த, 1,387 பேர் வசிக்கின்றனர். அவர்களுக்கு, தமிழக அரசு மூலம் ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் மாதந்தோறும், குடும்ப தலைவர்களுக்கு, 1,000 ரூபாய், பெண்களுக்கு, 750 ரூபாய், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 400 ரூபாய் வீதம், நிர்ணயிக்கப்பட்ட உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆனால், கடந்த மூன்று மாதமாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக, அகதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கடந்த மூன்று மாதமாக, உதவித்தொகை கிடைக்காமல் சிரமப்படுகிறோம். அந்த பணம் மொத்தமாக கிடைத்தால், குடும்ப செலவுக்கு உதவும். மேலும் ரேஷன் கடையில் பருப்பு வகைகளும் கிடைக்கவில்லை எனவும் முகாமில் வசிப்போர் கூறியுள்ளனர்