தமிழகம் 25 சதவீத இலவச கல்வித் திட்டத்தில் ஏழை குழந்தைகளை சேர்க்க மறுக்கும் தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள்: பெற்றோர்கள் புகார்

247 0

மத்திய அரசின் 25 சதவீத இலவச கட்டாய கல்வித்திட்டத்தில், சிபிஎஸ்இ படிப்புக்கு, தனியார் பள்ளிகளில் இடம் தர மறுப்பதால் ஏழை குழந்தைகள் துயரத்தில் உள்ளனர். தங்களது குழந்தைகள் எப்படியாவது சிபிஎஸ்இ. பள்ளியில் சேர்ந்து படித்து, சமூகத்தில் அரசு அல்லது தனியார் துறையில் உயர் பதவியில் வர வேண்டும் என்ற பெற்றோர்களின் கனவு தகர்ந்து வருகிறது. எனவே, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 25 சதவீத இலவச கட்டாய கல்வித்திட்டம் கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் கடந்த 2011ம் ஆண்டு அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் நடைமுறைப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் மத்திய அரசின் இக்கல்வி சட்டத்தை கேலிக்கூத்தாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. குழந்தைகளின் பெற்றோர், சிபிஎஸ்இ. பள்ளிகளுக்கு சென்று இத்திட்டத்தை பற்றி கேட்டாலும், இந்த திட்டமே இல்லை என்றும், பள்ளி முதல்வரை சந்திக்க அனுமதியில்லை என்று கூறி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

பணக்காரர்களின் பிள்ளைகள் படிக்கும் இப்பள்ளியில், ஏழை குழந்தைகளுக்கு இடமில்லை என்று பள்ளி நிர்வாகத்தினர் வெளியே அனுப்பி விடுவதாக பெற்றோர்கள் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளனர். சிபிஎஸ்இ பள்ளிகளை கட்டுப்படுத்தும் அரசு அலுவலகம் மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இல்லை. இதனால், பெற்றோர்கள் யாரிடம் சென்று முறையிடுவது, யாரிடம் புகார் தெரிவிப்பது என தெரியாமல் திணறுகின்றனர். எனவே, தென் மாவட்டத்திற்கு மதுரையில் ஒரு சிபிஎஸ்இ கல்வி அலுவலகம் இருந்தால் ஏழை குழந்தைகள் சிபிஎஸ்இ. பள்ளியில் மத்திய அரசின் 25 சதவீத இலவச கல்வித்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுவர். மேலும் இந்த திட்டமே இல்லை என்று சிபிஎஸ்இ பள்ளிகள் சொல்ல முடியாது. எனவே, 34 செக்‌ஷன்படி, 15 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளையும் ஆய்வு செய்து, முறையான நடவடிக்கை எடுத்து தென் மாவட்டங்களில் உள்ள பல ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகள் கல்வி பயிலவும், மத்திய அரசின் 25 சதவீத இலவச கட்டாய கல்வித்திட்டம் முறையாக, முழுமையாக செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசின் 25 சதவீத இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தில் குழந்தைகளை சேர்க்காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் 25 சதவீத இலவச கட்டாய கல்வித்திட்டத்தில் இடம் தர மறுப்பதால் தங்களது குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ கல்வி அளிப்பது என்ற பெரும்பாலான பெற்றோர்களின் கனவு எட்டாக்கனியாக உள்ளது. இந்த அவல நிலைய மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.