இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜிமை சந்திக்க ஓபிஎஸ் அவசர டெல்லி பயணம்

236 0

“சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குள் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது அல்லது முடக்குவது என்ற முடிவோடு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவு எம்பிக்களுடன் டெல்லி சென்று, தலைமை தேர்தல் ஆணையரை இன்று சந்தித்து பேசுகிறார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வராகவும், அதிமுக பொது செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து அதிமுக சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி இரண்டாக உடைந்தது. ஓ.பி.எஸ். அணிக்கு இதுவரை 12 எம்பிக்கள், 12 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுக தற்காலிக பொது செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது, செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியினர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ேநரில் மனு அளித்தனர். இதற்கு தேர்தல் ஆணையம் சசிகலாவிடம் விளக்கம் கேட்டது.

இது தொடர்பாக, சசிகலா தரப்பில் 70 பக்க விளக்க கடிதம் கடந்த 10ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. சசிகலா தரப்பு விளக்க கடிதத்துக்கு மார்ச் 14ம் தேதிக்குள் பதில் கடிதம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியினருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியினர் 61 பக்கம் விளக்க கடிதத்தை நேற்று அளித்தனர். இந்நிலையில், நாளை (16ம் தேதி) ஆர்.கே. நகர் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. அதற்குள் எப்படியாவது இரட்டை இலை சின்னத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ். அணியினரும், சசிகலா அணியினரும் உறுதியாக உள்ளனர். இரட்டை இலை சின்னம்தான் மக்கள் மனதில் இருந்து வருகிறது. அப்படி இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டால் ஆர்.கே.நகர் தேர்தலில் கனிசமான ஓட்டுக்களை பெறுவது கடினம் என்று இரண்டு அணியினரும் கருதுகின்றனர்.

எனவே, எப்படியாவது இரட்டை இலை சின்னத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் இரண்டு அணியினரும் குறியாக இருந்து வருகின்றனர். இரண்டு அணி சார்பிலும் அளிக்கப்பட்ட விளக்க கடிதத்தை தேர்தல் ஆணையம் கிடப்பில் போட்டாலும் இரண்டு அணியினருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காது. அந்த சின்னம் முடக்கப்படும். இரட்ைட இலை சின்னத்தை பெற்று விட்டால் கட்சியும் தங்கள் வசம் ஆகிவிடும். அதனால், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதில் போட்டா போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாகவே, இரண்டு அணியிலும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. ஜெயலலிதா இருக்கும் போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுகணமே வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்ேபாது அந்த முறை கடைபிடிக்கப்படவில்லை. அதிமுக இரண்டு அணியாக உள்ளதால்தான் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளனர். இது, கட்சியினரை கலக்கம் அடைய செய்துள்ளது.

இந்நிலையில், இன்று மீண்டும் ஓ.பி.எஸ். அணியினர் டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை சந்தித்து பேச உள்ளனர். ஓ.பி.எஸ். தலைமையில் நேரடியாக எம்பிக்கள் மற்றும் முக்கிய எம்எல்ஏக்கள், கட்சியின் முக்கிய தலைவர்களும் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார்கள். இதற்காக சென்னையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மா.பா.பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன், செம்மலை உள்ளிட்ட தலைவர்கள் இன்று காலை 6.30 மணிக்கு டெல்லி
செல்கின்றனர். அவர்கள் பிற்பகல் 12 மணியளவில் இந்திய தேர்தல் ஆணையரை சந்தித்து பேசுகிறார்கள். டெல்லி சென்றவுடன் அவர்களுடன் ஓ.பி.எஸ். ஆதரவு எம்பிக்கள் 12 பேரும் செல்ல உள்ளனர். சந்திப்பின் போது, சசிகலா தற்காலிக பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

தொண்டர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரே கட்சி விதிகளின்படி பொது செயலாளராக ஆக முடியும். பொது செயலாளர் இல்லாத பட்சத்தில் அவைத்தலைவர் கட்டுப்பாட்டில்தான் கட்சி இயங்கும். அவர்தான் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். அவர் அறிவிக்கும் வேட்பாளர் தான் அதிமுக சின்னத்தில் போட்டியிட முடியும். அவைத்தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் எங்களிடம்தான் உள்ளனர். எனவே, எங்கள் தலைமையில் இயங்கும் அதிமுக தான் உண்மையான அதிமுக. எங்களுக்கு தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என்றும் நேரில் அவர்கள் வலியுறுத்த உள்ளனர். ஓ.பி.எஸ். அணியினர் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையரை சந்திப்பது சசிகலா அணிக்கு கலக்கத்தையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.