“தமிழ்ப்பற்றாளர்”
உயர்.திரு.சின்னத்துரை.யோகலிங்கம்
பிறப்பிடம்:- புங்குடுதீவு 10 ம் வட்டாரம் தமிழீழம்
வதிவிடம்:- சார்லாண்ட் மாநிலம் கொம்பூர்க் நகரம்
உயிர்களின் தோற்றுவாய் பரிணாமத்தின் இயற்கைப் புரட்சியாகும். அதில் தோன்றிய மாந்த இனம் அறிவின் ஆற்றலினால் இயற்கையின் இயல்பினைப் புரிந்து உன்னத நிலையை அடைந்து உயர்வு பெற்றுள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மாந்த இனத்தில் பிறப்பெடுப்பது உயர்வாகக் கருதப்படுகின்றது. அதிலும் வாழும் வாழ்வில், தாம் சார்ந்த இனத்தின் மேன்மைக்காய் வாழ்ந்து உன்னத நிலையை அடைவது உயரிய பிறப்பாகப் போற்றப்படுகின்றது. அத்தகைய உன்னதமான வாழ்வை வாழ்ந்து இயற்கை எய்திய ‘ தமிழ்ப்பற்றாளர்’ உயர். திரு. சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் இழப்பு ஆற்றமுடியாத பேரிழப்பாகும்.
‘தமிழ்ப்பற்றாளர்’ உயர்.திரு.சின்னத்துரை.யோகலிங்கம் அவர்கள், தனது ஆழ்மனதில் தேசப்பற்றினையும், தாய்மொழிப்பற்றினையும் உயிர் மூச்சாய் ஏற்று வாழ்ந்த உன்னதப் பிறவியாவார். தமிழீழப் போர் காரணமாகப் புலம்பெயர்ந்து வந்த போதும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களின் வழிகாட்டலில் உருவான ‘தமிழ்க் கல்விக் கழகம்’ தன்னில் தன்னை இணைத்து, எமது எதிர்காலச் சந்ததிகள் தேசப்பற்றோடும், மொழிப்பற்றோடும் வாழவேண்டும் என்ற உயரிய நோக்கோடு, தமிழாலயத்தில் இணைந்து, பல ஆண்டுகளாக நிர்வாகியாக பணியாற்றியதோடு, பத்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மேற்கு மாநிலச் செயற்பாட்டாளராக பணியாற்றியதோடு. கொம்பூர்க் தமிழாலயத்தில் நிர்வாகியாகவும் பணியாற்றி 20 ஆண்டுகள் பணி நிறைவில் தமிழ் வாரிதியாகவும், 25ம் ஆண்டு நிறைவில் தமிழ் மாணியாகவும், 30ம் ஆண்டு பணிநிறைவில் தமிழ்க் கல்விக் கல்விக் கழகத்தின் அதிஉயர் விருதான மூன்று உடுக்கள் பொறிக்கப்பட்ட பதக்கத்தை நெஞ்சில் தாங்கிய மேன்மையைப் பெற்ற பேராளனை இழந்து நிற்கின்றோம்.
வாழ்நாளை பிறருக்காக அர்ப்பணித்த ‘தமிழ்ப்பற்றாளர்’ உயர்.திரு.சின்னத்துரை யோகலிங்கம் அவர்களை இழந்து மீளாத்துயரில் வாடும் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றோம். அன்னாரின் உயிர்ப்பு இயற்கையோடு ஒன்றிக் கலந்து அமைதியடைய வேண்டுகின்றோம்.
இனத்தோடு ஒன்றி வாழ்ந்த மாந்தர்
இனத்தின் இதயத்துள் வாழ்வர்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.


