உண்மையில் 28 கோடி ரூபா பெறுமதியான ஆணி பொருத்தப்பட்டதா? உண்மையை மக்களுக்கு பகிரங்கப்படுத்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வலியுறுத்தினார்.
யார் குறிப்பிட்டது, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சு இவ்விடயம் தொடர்பில் அறிக்கை வெளியிடவில்லை.
பத்திரிகைகளே செய்தி வெளியிட்டுள்ளன என்று குறிப்பிட்ட அமைச்சர் பந்துல குணவர்தன இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அறிக்கையை சபைக்கு சமர்ப்பிப்பேன் என்றார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர களனி ‘கல்யாணி நுழைவாயில்’மேம்பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆணிகளை போதைப்பொருள் பாவனையாளர்கள் போதைப்பொருளுக்காக அகற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 28 கோடி பெறுமதியான ஆணிகள் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
கல்யாணி நுழைவாயில் என்ற இந்த பாலம் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது.28 கோடி பெறுமதியான ஆணிகளை போதைப்பொருள் பாவனையாளர்கள் திருடியதாக அண்மையில் செய்தி வெளியாகியது. பாலம் திறந்து வைக்கப்பட்டு 591 நாட்களுக்குள் இவ்வாறு ஆணிகள் திருடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அகற்றப்பட்ட ஆணிகள் பெறுமதி 28 கோடி ரூபா என்று மதிப்பிட்டப்பட்டுள்ளது.அவ்வாறாயின் 77,92 42 கிலோகிராம் இரும்பு இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது.அவ்வாறாயின் 779240 ஆணிகளை போதைப்பொருள் பாவனையாளர்கள் அகற்றி இருக்க வேண்டும்.
779240 ஆணிகளை அகற்ற வேண்டுமாயின் ஒரு நாளைக்கு 100 ஆணிகளையேனும் கழற்ற வேண்டும். அதற்கு 21 வருடங்கள் செல்லும்.
பாலம் திறந்து வைக்கப்பட்டு 591 நாட்களுக்குள் 28 கோடி பெறுமதியான ஆணிகளை அகற்ற வேண்டுமாயின் ஒருநாளைக்கு 1300 ஆணிகளையேனும் அகற்ற வேண்டும்.
போதைப்பொருள் பாவனையாளர்கள் காலை 06 மணிமுதல் மாலை 06 மணிவரையான காலப்பகுதிக்குள் குறைந்தப்பட்சம் 10ஆணிகளையே அகற்ற முடியும்.
களனி பாலத்தில் இருந்து ஆணி அகற்றப்பட்டதாக குறிப்பிட்ட விடயத்தின் உண்மை தன்மை என்ன, களனி பாலத்தில் ஆணி பொருத்தப்பட்டதா,இல்லை பொருத்தப்பட்ட ஆணிகளை உண்மையில் போதைப்பொருள் பாவனையாளர்கள் அகற்றினார்கள். உண்மையை நாட்டுக்கு குறிப்பிடுங்கள் என்றார்.
இதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன சட்டத்தரணியான தயாசிறி ஜயசேகர இலக்கம்,தொகையுடன் குறிப்பிட்ட விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
களனி பாலம்,28 கோடி ஆணி விவகாரம் யார் குறிப்பிட்டது.நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சு அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.பத்திரிகையில் வெளியான செய்தியை கொண்டு இவர்(தயாசிறி) உரையாற்றுகிறார்.
புகையிரத பாதைகளில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு திருட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு திருட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
பொலிஸார்,விசேட பாதுகாப்பு படை ஆகியோரின் ஒத்துழைப்புடன் புகையிரத பாதைகளில் உள்ள இரும்புகளை பாதுகாத்து வருகிறோம்.
புகையிரத பாதைகளில் உள்ள சிறு இரும்புகளை கூட ஒருசிலர் விட்டு வைப்பதில்லை. இரும்புகளை சேகரித்து அதை விற்பனை செய்கிறார்கள். இதற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நான் களனி பாலம் ஆணி அகற்றல் சம்பவம் தொடர்பில் வினவினேன்.
ஆனால் நெடுஞ்சாலைகள் அமைச்சர் புகையிரத தண்டவாளம் குறித்து பேசுகிறார். எனக்கு அது அவசியமில்லை.28 கோடி பெறுமதியான ஆணிகள் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா, அல்லது உண்மையில் ஆணி பொருத்தப்பட்டதா என்றார்.
இதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அறிக்கை கிடைத்ததும் அதை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார்.

