பாஸ்மதி தவிர்ந்து வேறு அரிசி இறக்குமதிக்கு இனி அனுமதி வழங்கப்பட மாட்டாது

136 0
அரிசி உற்பத்தியில் ஓராண்டு காலத்துக்குள் தன்னிறைவடைந்துள்ளோம். எனவே இனி எந்தவொரு காரணத்துக்காகவும் பாஸ்மதி தவிர்ந்து வேறு எவ்வகையான அரிசி இறக்குமதிக்கும் அனுமதி வழங்காதிருக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையின் தேவைக்காவே பாஸ்மதி அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர , 2025இல் ஏனைய அனைத்து பயிர்செய்கைகளிலும் 80 வீதம் தன்னிறைவடைவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் நேற்று திங்ட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயத்துறை அமைச்சு கடந்த ஓராண்டுக்குள் அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டு ஜூலை 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற சந்தர்ப்பத்தில் விவசாயத்துறை பாரிய அழிவை சந்தித்திருந்தது. எனினும் அந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி, இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் முழுமையான ஒத்துழைப்புடன் கடன் திட்டத்தின் கீழ் 65,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார்.

அதன் பின்னரே விவசாயிகள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினர். அதற்கமைய கடந்த போகத்தில் 2 இலட்சத்து 12,000 ஹெக்டயர் வயலில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டு அதிலிருந்து பன்மடங்க அருவடை கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய தற்போது எமக்கு தேவையான அரிசி எமது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு பாரியளவு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டியேற்பட்டதால் , அதற்காக பல மில்லியன் டொலர்களையும் செலவிட வேண்டியேற்பட்டது. எனினும் இனி அவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஏற்படாது. இனி எக்காரணத்துக்காகவும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்காதிருப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. எனினும் சுற்றுலாத்துறைக்காக பாஸ்மதி அரிசியை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

அத்தோடு விவசாயத்தை நவீனமயப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக விவசாயிகளுக்கு வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இது தொடர்பில் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் சென்று விவசாயிகளை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்களையும் விவசாய திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

அத்தோடு இனிவரும் காலங்களில் உள்நாட்டு தேவைக்காக மாத்திரமன்றி , வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொண்டு விவசாயத்தை முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான இலக்குகளை அடைவதற்கு விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டங்களுக்காக 750 மில்லியன் ரூபாவினை வங்கிகளிடமிருந்து பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை ஏற்படுமிடத்து , நிதி அமைச்சிடமிருந்து வேண்டியளவு நிதியைப் பெற்றுக் கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய விரைவில் எம்மால் இந்த இலக்குகளை அடைய முடியும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.