நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகிறார்.
அதற்காக அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினாலே அதனை வெற்றிகொள்ளலாம். வீழ்ச்சியடைந்திருந்த இந்த நாட்டை மீட்பதற்கு ரணில் விக்ரமசிங்கவே நடவடிக்கை எடுத்தார்.
அதனால் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மைக்கு கொண்டுவர முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற அரசியல் சபை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இற்றைக்கு ஒருவருடத்துக்கு முன்னர் நாட்டு மக்கள் நாளைய தினத்துக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற நிச்சயமற்ற நிலையிலேயே இருந்தனர்.
அந்தளவுக்கு நாடு வங்குராேத்து அடைந்து, மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் வீணாகிபோன நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை பொறுப்பேற்றார்.
நாடு இருந்த நிலைமையில் இன்னும் 50வருடங்களுக்காவது நாடு மீண்டெழுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்து வந்தது.
ஆனால் ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் அனுபவம் மற்றும் திறமையால் மக்கள் தலை நிமிர்ந்து செல்ல முடியுமான நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறார். என்றாலும் நாட்டில் ஸ்திரமான பொருளாதார நிலைமையை ஏற்படுத்த அனைவரதும் ஒத்துழைப்பு தேவையாகும்.
மேலும் பொருளாதரத்தை பலப்படுத்த ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட எதிர்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன.
இவர்களின் இந்த செயலால் வேலைத்திட்டங்களை முறையாக முன்னெடுக்க முடியாமல் இருக்கிறது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்போது அது தொடர்பில் பொய் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை குழப்பி வந்தனர்.
அதனால் மக்கள் அச்சப்பட்டனர். என்றாலும் அவர்கள் தெரிவித்தது போல் வங்கிகளில் இருக்கும் மக்களின் வைப்பு பணத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதா?
அதேபோன்று அஸ்வெசும நிவாரண வேலைத்தி்ட்டத்தை முன்னெடுக்கும்போதும் அதனையும் குழப்பும் வகையில் பிரசாரம் மேற்கொண்டுவந்தனர். இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிக்கிறங்க ஆரம்பித்தனர். ஆனால் இந்த நிவாரண வேலைத்திட்டத்துக்கு பயனாளிகளை சேர்த்துக்கொள்ளும் பணி இன்னும் முடிவடையவில்லை. நிவாரணம் பெற தகுதி இருந்தும் இதில் இணைத்துக்கொள்ளப்படாதவர்கள் அது தொடர்பில் மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று இந்த திட்டத்துக்கு உள்வாங்க தகுது இல்லாத யாராவது இதில் உள்வாங்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பாக முறைப்பாடு செய்யவும் முடியும். அரசியல் குராேதம் நோக்கில், அரசாங்கத்தின் வேலைத்திடடங்களை குழப்புவதற்கே சிலர் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர். அதனால் மக்கள் இது தொடர்பாக சிந்தித்து செயற்பட வேண்டும்.
அத்துடன் செப்டம்பர் மாதமாகும்போது நாடு வங்குராேத்து நிலையில் இருந்து மீண்டு விடும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அதன் பின்னர் சர்வதே நாடுகளுடன் பல் உடன்படிக்கைகளுக்கு சென்று நாட்டை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். அதேபோன்று வங்கி வட்டி வீதத்தை குறைத்து வியாபாரிகளை பலப்படுத்த இருக்கிறோம். வியாபாரிகளை பலப்படுத்துவதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியும். அதேபோன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தேவையான வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்தி, நாட்டுக்கு அதிகமான முதலீட்டாளர்களை அழைத்துவர நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதற்கு தேவையான சட்ட திட்டங்களை படிப்படியாக பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டு வருகிறோம்.
எனவே விழ்ச்சியடைந்த இந்த நாட்டை மீட்டெடுத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையை ரணில் விக்ரமசிங்கவே மேற்கொண்டார். அதனால் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாருக்கும் முடியாது என்றார்.

