டெங்கு அபாய நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவசர கூட்டமொன்றுக்கு கிழக்கு முதலமைச்சர் பணிப்புரை

216 0

கிண்ணியாவில் ஏற்பட்டு்ள்ள டெங்கு அபாய நிலைமையை கட்டுப்படுத்துவது தொடர்பில் அவசர கூட்டமொன்றை கூட்டுமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்,எம் நசீருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பணிப்புரை விடுத்துள்ளார்,

இதனடிப்படையில் நாளை கிழக்கு மாகாண சபைக்கூட்டத்தில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதுடன் இதன் போது சுகாதாரத் துறைசார் முக்கிய அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர்,

இதன் போது மாகாண சபைத் தலைமைச் செயலாளர்,மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சுகாதாரப் பணிப்பாளர்,மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்,

அத்துடன் டெங்கு பரிசோதனையின் போது நோயாளிகள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் குறித்தும் இரத்தப் பரிசோதனைகளின் போது செலுத்தப்படும் கட்டணங்களினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை வழங்கவும் இதன் போது கவனம் செலுத்த வேண்டுமென கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டுள்ளார்,

உள்ளூராட்சி மன்ற செயலாளர்களுக்கு இதற்கு முன்னர் முதலமைச்சரின் செயலாளரின் ஊடாக சில பணிப்புரைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் நாளைய கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

டெங்கு அவரச நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டில் மத்திய அரசாங்கத்தின் தேவைகள் ஏற்படும் பட்சத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பிரதியமைச்சர் பைசல் காசிம் ஆகியோரிடம் கோரிக்கைகளை விடுத்து அவற்றைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு முதலமைச்சர் கேட்டுள்ளார்.

மக்கள் டெங்கு நோய் பரவும் அபாயமுள்ள இடங்கள் குறித்து உடனடியாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவித்து மேலும் இது பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டார்.