அஸ்வெசும நலன்புரித் திட்டம் : அரசுக்கு எதிர்காலமில்லை

197 0

சமுர்த்தி நலன்புரித் திட்டத்தால் எவரும் பயனடையவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் முன்னாள் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில் அவர் தற்போது பதவி விலக வேண்டும். அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ளாவிட்டால் ஆளும் தரப்பில் எவரும் மக்கள் மத்தியில் சென்று அரசியல் செய்ய முடியாத நிலை ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராட்சி தெரிவித்தார்.

தவலதுகொட பகுதியில் சனிக்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிடும் கருத்துக்கள் முறையற்றது. அடிமட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தாமல் தன்னிச்சையான முறையில் நலன்புரித் திட்ட கொள்கைகளை வகுக்க முடியாது.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் காணப்படும் குறைப்பாடுகளை அரச அதிகாரிகள் மீது சுமத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கம் எடுத்த கொள்கை தரப்படுத்தலுக்கு அமையவே அரச அதிகாரிகள் செயற்பட்டார்கள். ஆகவே அரச அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டுக்களை முன்வைப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சமுர்த்தி நலன்புரித் திட்டத்தால் எவரும் முன்னேற்றமடையவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிடுகிறார். ஒருதரப்பினரது ஆலோசனைகளுக்கு அமைய சமுர்த்தி திட்டம் பலவீனமடைந்துள்ளது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க அவர் முயற்சிக்கிறார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் சமுர்த்தி இராஜாங்க அமைச்சராக செஹான் சேமசிங்க பதவி வகித்தார். சமுர்த்தி திட்டத்தால் எவரும் பயன்பெறவில்லை என்றால் அவர் முறையாக செயற்படவில்லை என்று கருத வேண்டும் அவ்வாறாயின் பொறுப்பை ஏற்று அவர் பதவி விலக வேண்டும்.

அஸ்வெசும நலன்புரித் திட்டத்துக்கான ஆட்சேபனைகள் 10 இலட்சத்தை கடந்துள்ளன. பெரும்பாலானவர்கள் மேன்முறையீடு செய்யவில்லை. அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் உள்ள குறைப்பாடுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ளாவிட்டால் அரசாங்கத்துக்கு எதிர்காலம் கிடையாது.ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எவரும் மக்கள் மத்தியில் சென்று அரசியல் செய்ய முடியாது என்றார்.