மதுரையில் ரூ.215 கோடியில் 6 தளங்களுடன் 2.13 லட்சம் சதுர அடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
மதுரை புதுநத்தம் சாலையில் சொக்கிகுளத்தில் நவீன வசதிகளுடன் பிரம்மாண்ட நூலகம் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா நலத் திட்டத்தில் இணைக்கப்பட்ட இந்த நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். மாலை 4.55 மணிக்கு நூலக வளாகத்துக்கு வந்த முதல்வரை அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
நூலகத்தின் வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த கருணாநிதி சிலையை முதல்வர் திறந்து வைத்தார். கருணாநிதி உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர் உதயநிதி உள்ளிட்டபலரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் முதல்வரும், அமைச்சர்களும் கருணாநிதி சிலை முன்பு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் மாலை 5.04 மணிக்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ரிப்பன் வெட்டி முதல்வர் திறந்து வைத்தார். அமைச்சர்களுடன் ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார், தலைவர் ரோஷினி நாடார் ஆகியோரும் உடனிருந்தனர்.
நூலக வரவேற்பரை அருகேயிருந்த கல்வெட்டை முதல்வர் திறந்து வைத்தார். நூலகத்தின் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த மதுரையின் பழமை, வளர்ச்சியை காட்டும் புகைப்படக் காட்சிகளை முதல்வர் பார்வையிட்டார்.
கீழடி அருங்காட்சியக் காட்சிகள், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் இளைஞர் சிலையை ஆர்வத்துடன் முதல்வர் பார்வையிட்டார்.
அங்கிருந்த பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்ட கருணாநிதியின் உரை, மகாத்மா காந்தி ராட்டை நூற்கும் காட்சிகளை பார்த்தார். பின்னர் கூட்ட அரங்கை பார்வையிட்டார். மேல் தளங்களுக்கு எஸ்கலேட்டரில் சென்ற முதல்வர் அங்கு சிறுவர்களுக்கான சிறப்பு படிப்பரங்கை பார்வையிட்டார். பின்னர் சிறப்பு குழந்தைகளுக்கான திரை அரங்கை பார்வையிட்டார்.
தன்னை வரவேற்ற குழந்தைகளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்து கலந்துரையாடினார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தரையில் முதல்வர் அமைச்சர்களுடன் நடந்து ரசித்தார். அந்த அறையில் இருந்த இருக்கையில் யார் அமர்ந்தாலும் அவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அருகே அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் தொழில்நுட்பத்தை முதல்வர் கண்டு ரசித்தார். அந்த இருக்கையில் முதல்வரும், அமைச்சர் துரைமுருகனும் அமர்ந்தபோது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவத்துடன் சில விநாடிகள் அவர்கள் பேசுவது போல திரையில் தெரிந்தது.
30 நிமிடங்களுக்கும் மேல் நூலகத்தின் அனைத்து பிரிவுகளையும் பார்வையிட்ட முதல்வர், அங்கிருந்த பார்வையாளர் புத்தகத்தில் தனது வாழ்த்துகளை பதிவு செய்தார். ‘மதுரையில் இந்த நூலகத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறேன். கலைஞர் வழியில் அயராது உழைப்பேன், வாழ்த்துகள்’ என பதிவு செய்தார்.
முதல்வருடன் அமைச்சர்கள், அரசு செயலர்கள், எம்.பி., எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். பின்னர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நூலக தொடக்க விழா கூட்டத்தில் முதல்வர் பேசினார்.
இவ்விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன் எம்.பி., கோ.தளபதி எம்.எல்.ஏ.,ஆட்சியர் எம்.எஸ்.சங்கீதா, மதுரை மேயர் இந்திராணி மற்றும் ஏராளமான மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

