வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும் அதனது தாய்க் கல்வி நிறுவனமான பற்றிக்கோட்ட செமினரியினதும் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் ஒன்றுகூடல் வாரம் ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வாகப் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனபவனி இன்று (15.07.2023) காலை 7 மணியளவில் கல்லூரி வாயிலில் இருந்து ஆரம்பமாகி, கோட்டைக்காடு, அராலி, செட்டியார்மடம், துணவி, நவாலி, ஆனைக்கோட்டை, மானிப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, சித்தங்கேணி, வட்டுகோட்டை வழியாக யாழ்ப்பாணக் கல்லூரியினை வந்தடைந்தது.
இதன்போது பழைய கார் , தட்டி வான், உந்துருளிகள் என்பனவற்றில் பழைய மாணவர்கள் பாடசாலை கொடிகளை ஏந்தியவாறு பவனி வந்தனர்.இன்று முதல் ஜூலை 22ஆம் திகதி வரை ஒன்றுகூடல் வாரம் கோலாகலமாக இடம்பெறவுள்ளதாக பழைய மாணவர் சங்க ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணக் கல்லூரியும் பற்றிக்கோட்டா செமினரியும் 1823ஆம் ஆண்டு முதல் கடந்த 200 வருடங்களாக வழங்கிய கல்விப் பணியினையும், சமூகப் பணியினையும் நினைவுகொள்ளும் வகையிலும், கொண்டாடும் வகையிலும், அவை குறித்துச் சிந்திக்கும் வகையிலும், கல்லூரியின் எதிர்காலப் பயணம் குறித்துத் திட்டமிடும் வகையிலுமான பழைய மாணவர் ஒன்றுகூடல் வார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
உலகம் முழுவதிலும் இருந்து வந்த கல்லூரியின் பழைய மாணவர்கள் இந்த நிகழ்வுகளிலே பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

