தங்காலை கல்பொக்க பகுதியில் நபர் ஒருவர் நேற்றிரவு பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றியதையடுத்து ஏற்பட்ட தகராறில் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர், தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொடெல்லவெல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், பண கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிரட் முதலீட்டு வர்த்தகத்துக்காக கொடுத்த 20 இலட்சம் ரூபாயை திருப்பி கேட்பதற்காக சந்தேகநபரின் வீட்டுக்கு சென்ற போது, இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம், நீதவான் விசாரணைகளுக்காக தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அவரை கைது செய்ய தங்காலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

