காணாமல்போனவர்கள் வரும் வரை காத்திருப்பவர்களின் நிலை என்ன ? – ‘ஆறாம் நிலம்’ பட இயக்குநர் ஆனந்த ரமணன்

104 0
ழத் தமிழர்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் இயக்குநர் ஆனந்த ரமணன் இயக்கிய ‘ஆறாம் நிலம்’ முழு நீளத் திரைப்படம் இன்று வியாழக்கிழமை (13) திருகோணமலையில் உள்ள சரஸ்வதி திரையரங்கில் மாலை 4.30 மணி காட்சியாக காண்பிக்கப்படுகிறது.

இந்த படம் முன்னதாக இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இப்படம் திரையிடப்பட்டதையடுத்து, கவிப்பேரரசு வைரமுத்து, சீமான் போன்ற பிரபலங்கள் ‘ஆறாம் நிலம்’ படத்தை வியந்து பாராட்டியிருந்தனர்.

காணாமல் போனோர் பிரச்சினைகள், காணாமல் போனோரின் உறவுகளது துயரம் – ஏக்கம், உள ரீதியான தாக்கங்கள், அவர்களது போராட்டம், யுத்தத்துக்கு பின்னரான அந்த மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள், பெண்தலைமைத்துவ குடும்பமொன்றின் நிலை, பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பின்மை, கண்ணிவெடி அகற்றும் பணிகள், மனித எச்சம் கண்டுபிடிப்பு போன்ற பல விடயங்களை படத்தின் பல்வேறு காட்சிகளின் மூலமாக தொட்டுக் காட்டியிருக்கிறார், இயக்குநர்.

இன்றைய தினம் திருகோணமலையில் ‘ஆறாம் நிலம்’ வெளியாகும் நிலையில், இயக்குநர் ஆனந்த ரமணன் வீரகேசரிக்கு அளித்த நேர்காணல் இனி….

‘ஆறாம் நிலம்’ என்பது என்ன? 

ஐவகை நிலங்களாக குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த நிலம், முல்லை – காடும் காடு சார்ந்த நிலம், மருதம் – வயலும் வயல் சார்ந்த நிலம், நெய்தல் – கடலும் கடல் சார்ந்த நிலம், பாலை – வறண்ட நிலம் என்பன குறிப்பிடப்படுகிறது. ஆறாவது நிலமாக போரும் போர் சார்ந்த நிலமும் ஏன் இருக்கக்கூடாது என்ற எனது சிந்தனையில் உருவானதே ‘ஆறாம் நிலம்’.

இப்போது சில பகுதிகளில் நிலங்கள் மீளளிக்கப்பட்டு வருகின்றன. அவை புதிய நிலங்களாக கிடைக்கப்பட்டுள்ளன. இதுதான் ‘ஆறாம் நிலம்’.

ஒரு திரைப்படத்தால் சமூக மாற்றத்தை கொண்டுவர முடியும் என நம்புகிறீர்களா? 

நிச்சயமாக. பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், ஒருசில மனங்களில் மாற்றம் உண்டாகும். எமது படைப்போடு தொடர்புடைய அனுபவத்தை பெற்றவர்கள், எமது கதையோடு பொருந்துகிற சம்பவங்களை தம் வாழ்க்கையில் எதிர்கொண்டு, வெளியே சொல்ல முடியாமல், மனதுக்குள் தேக்கி வைத்திருப்பவர்களுக்கு ஓர் ஊக்கத்தை, உத்வேகத்தை நிச்சயமாக குறிப்பிட்ட அந்த கலைப் படைப்பு கொடுக்கும்.

‘ஆறாம் நிலம்’ சமூகத்தில் எதை மாற்றப்போகிறது?

ஒரு விடயத்தை தெளிவுபடுத்துகிறேன். இது, நான் அன்றாடம் நேரில் பார்ப்பவர்கள் பற்றிய கதை.

இந்தப் படத்தில் மூன்று விதமானவர்களை பார்க்கலாம். ஒன்று, பாதிக்கப்பட்டவர்கள். இரண்டாவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள். மூன்றாவது, பாதிக்கப்பட்டவர்களை சுற்றியுள்ள அன்பான உறவுகள். அவர்கள் பாதிக்கப்பட்ட நபரை எப்படி பார்க்கிறார்கள் என்றொரு விடயமும் முக்கியமானது. இந்த மூன்று தரப்பினரை நிஜத்திலும் நாம் பார்க்கிறோம்.

கணவன் – மனைவி உறவுடையவர்களின் வாழ்க்கையை கொண்டு ஒரு விடயத்தை சுட்டிக்காட்டுவதானால்,

நம் மனங்களில் இன்றளவில் இருப்பதென்ன? காணாமல் போனவர்கள் திரும்பி வரவேண்டும் என்பதே. எத்தனை வருடங்கள் கழித்தேனும் அவர்கள் வருவார்கள் என்பது ஒரு புறமிருக்க, அவர்கள் வரும் வரை காத்திருப்பவர்களின் நிலை என்ன?

வாழ்வதா அல்லது வாழாமல், காத்திருந்து, வாடித் தளர்ந்து மடிவதா?

கதையோ அல்லது நிஜ வாழ்க்கையோ காணாமல் போன கணவர் வரும் வரை ஒரு மனைவியால் எத்தனை காலம்தான் காத்திருக்க முடியும்? வருடக்கணக்கில் காத்திருந்து வாழாமல் வீணாய் துவளுவதை விட தனக்கேற்ற இன்னொரு வாழ்க்கையை அவள் அமைத்துக்கொண்டு வாழ்வதில் என்ன தவறு?

குறிப்பிட்ட இந்த தமிழ்ச் சமூகத்தில்தான் பெண்கள், தங்கள் கணவரை தொடர்ந்து தேடிக்கொண்டே இருக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். பெண்களின் இந்த இயலாமையை பயன்படுத்தி, அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்து, அந்த நம்பிக்கையின் மூலம் அவர்களது வாழ்க்கையை இல்லாமல் செய்துவிடுகின்றனர். என்றாலும், அவ்வாறான பெண்களுக்கும் அடுத்தொரு வாழ்க்கை தேவை.

வாழ்க்கை பற்றிய புதிய சிந்தனையை இந்த தலைமுறையிலேயே மாற்றியமைக்க வேண்டும் என நினைக்கிறேன்.

எனது பிரதான கதாபாத்திரமான மலைமகள், காணாமல்போன தன் கணவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என விடாமுயற்சி கொண்டு தேடுகிறாள். ஆனால், அவளது மாமியார் (கணவரின் தாய்) தன் மருமகளுக்கு மறுமணத்தை வலியுறுத்துகிறாள். அதைப்போல நமது சமூகத்தில் இரண்டு பெண்கள் தங்கள் மகளுக்கோ மருமகளுக்கோ மறுமணத்தை போதித்தால், அது எனக்கான வெற்றி.

‘கவிதா’ கதாபாத்திரம் உங்களுடைய மனசாட்சியா?

கவிதா என்பதே நான்தான். வாழ்வதற்கு என்ன வழி, ‘போனது போனதுதான் இனி எங்கட வாழ்க்கைய எப்படி வாழறது என்று பார்க்க வேணும்’ என்று சொல்கிற மிக யதார்த்தமான கதாபாத்திரம் அவள். அதனால் ஒரு தமிழ் சமூகத்தின் கலாசார கொள்கையை மீறுபவளாக பிறரால் பார்க்கப்படுகிறாள்.

மலைமகள் கவிதாவின் சிந்தனையிலிருந்து மாறுபட்டவள். அவளும் கவிதாவைப் போலவே சிந்தித்திருக்க வேண்டும்.

போராட்டங்களில் ஈடுபடும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் நம்பிக்கையோடு கவிதாவின் சிந்தனை முரண்படுகிறதே…

வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னாள் போராளிகள் உட்பட பெருமளவிலான மக்கள் அன்றாடம் தண்ணீர், உணவுப் பிரச்சினையால் தவிக்கின்றனர். சாப்பிடவே வழியின்றி துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். தினமும் வாழ்வதற்கே போராடவேண்டியிருக்கிறது. இந்நிலையில், வீதிக்கிறங்கி போராடுவது தேவைதானா என்றொரு கேள்வியும் எழுகிறது.

போர் முடிந்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால், இந்த போராட்டம் இன்னமும் முடியவில்லை. நான் சொல்வது வாழ்க்கைப் போராட்டத்தை பற்றி. வாழ்வதற்காக தினமும் ஒவ்வொரு நொடியும் போராடிக்கொண்டிருக்கிற ஒரு சமூகத்தினரை பற்றி. உணவு, ஆரோக்கியம், உறைவிட தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக வாழ்க்கையோடு போராடுபவர்களை பற்றி‍யே இந்த படம் பேசுகிறது. அதை தவிர வேறு போராட்டங்களுக்கும் இந்த படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

கண்ணி வெடி அகற்றும் பணிகளை காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள்…. இந்த பணி சார்ந்து ஏதும் பயிற்சி எடுத்துக்கொண்டீர்களா?

இந்த படத்துக்காகவே நான்கு மாதங்களாக கண்ணிவெடி அகற்றும் பணி நடைபெறும் களத்துக்கு சென்று அவதானித்தேன். இது மிகப் பெரிய ஆராய்ச்சி. அத்தோடு, எனது உதவியாளர் கண்ணிவெடி அகற்றுவது தொடர்பில் விடயமறிந்தவர். எனக்கும் ஓரளவு அதைப் பற்றி தெரியும் என்பதால் படத்தில் காட்டக்கூடியதாக இருந்தது.

படத்தில் நடித்தவர்களை பற்றி சில வார்த்தைகள்…

பார்வையாளர்களால் பெரிதும் அறியப்படாதவர்களையே தெரிவுசெய்து, படத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். ஏனென்றால், ரசிகர்களின் மனதில், இந்த நடிப்புக் கலைஞர்கள் எடுத்துக்கொண்ட பாத்திரங்களே பதிவாக வேண்டும், நடித்தவர்கள் அல்ல.

நவயுகா, மலைமகளாக பிரதான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருந்தார். அவர் நடித்த சில குறும்படங்களை நான் பார்த்திருக்கிறேன்.  தாய்மை – அமைதிக்குரிய முகத்தோற்றம், உணர்வுகளை வெளிப்படுத்துவது என இந்த கதைக்கு மிகப் பொருத்தமானவர். தமிழினி என்ற சிறுமியாக நடித்த தமிழரசியின் நடிப்பும் அருமை. இவர்களை தவிர, வயதான அம்மா, கண்ணிவெடி அகற்றும் குழுவினர், குறிப்பாக கவிதா, கிராம சேவகர் போன்ற பாத்திரங்கள் அதிக காட்சிகளில் பயணித்திருக்கிறார்கள்.

ஹட்டனை சேர்ந்த நண்பர் அன்டன் அண்மையில் மறைந்துவிட்டார். முன்னரே சில படங்களில் நடித்த அவரை பார்த்தவுடனே கிராம சேவகர் பாத்திரத்துக்கு தெரிவுசெய்துவிட்டேன். நான் நினைத்ததை போலவே மிக இயல்பாக நடித்திருந்தார். அவரின் இறப்பு எமக்கு வேதனையளிக்கிறது.

மொத்தமாக, படத்தில் நடித்த எல்லோரும் மிக திறமையானவர்கள்.

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு எது காரணம்? கதையா, கதாபாத்திரமா, இயக்குநரா?

ஒரு இயக்குநரே திரைக்கதையை எழுதுவாராயின், ரசனையோடு எழுதுவார். அவ்வாறு எழுதும்போதே தன்னுடைய பாத்திரங்களையும் அவற்றின் தன்மைகளையும் மனதில் பதித்துவிடுவார்.

திரைக்கதை சிறப்பாக இருந்தால், சுமாரான இயக்குநர் படத்தை இயக்கினாலும் படம் வெற்றி பெறும். ஏனென்றால், கதை பெறுமதி வாய்ந்தது.

அடுத்து, அந்தந்த கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்களை இயக்குநர் தெரிவுசெய்ய வேண்டும்.

திரைக்கதை, இயக்கம், கதாபாத்திரம் எல்லாம் கச்சிதமாக அமைந்து படம் வெற்றி பெற்றுவிட்டது என்றால், அந்த வெற்றி இயக்குநரிலும் திரைக்கதை எழுத்தாளரிலுமே தங்கியிருக்கிறது என கருதலாம்.

ஆக, இது ஒரு கூட்டுக்கலை. ஒரு படத்தின் வெற்றி என்பது அனைத்திலும், அனைவரது ஒத்துழைப்பிலும் தங்கியிருக்கிறது என்பதே உண்மை.

உங்களது படைப்புகளின் பின்னணியில் உள்ள நோக்கம்? 

இலங்கையை பொறுத்தவரையில் சிங்கள திரைத்துறை தரம் வாய்ந்த இடத்தை அடைந்திருக்கிறது. அதேபோன்று ‘இது, இலங்கையின் தமிழ் சினிமா’ எனுமளவுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை இந்நாட்டில்  உருவாக்க கலைத்துறையை சேர்ந்த என்னை போன்றவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு தமிழ் சினிமா எப்படியோ, அவ்விதமாக இலங்கை தமிழ் சினிமா தனித்து பேசப்பட வேண்டும். அதை நாம் சாதித்துக் காட்டுவதற்கு எம்மிடம் காத்திரமான கதைகள், சினிமா சார்ந்த அறிவு இருக்க வேண்டும். சினிமாவை பற்றி நிறைய கற்க வேண்டும்.

அன்றாடம் சந்தித்த கஷ்டங்கள், இடம்பெயர்வுகள், அகதி வாழ்க்கையை கடந்து வந்த எனது பயணத்தோடு தொடர்புபட்ட கதைகளை காத்திரமாக சொல்ல விரும்புகிறேன். அதுமட்டுமன்றி, நாட்டின் இறைமையை, சட்டதிட்டங்களை உணர்ந்தும், அதேவேளை சுயாதீனமாகவும் கலை படைக்கும் நோக்கமுள்ள ஒருவராக நான் இருக்கிறேன். அதைப் பின்பற்றியே எனது கதைகள் அமைகின்றன.

‘ஆறாம் நிலம்’ சாதிக்கப்போவது?

தெரியவில்லை. ஆனால், இந்த படம் சாதிக்கவில்லை என்றால் எனது அடுத்த படம் சாதிக்கும் என்று நினைக்கிறேன்.

உங்களது அடுத்த படம்?

காட்டை பிரதானமாக கொண்டு ஒரு படத்தை இயக்கி வருகிறேன். இப்போதைக்கு இந்த தகவல் போதுமானது.

 மா. உஷாநந்தினி