செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை

161 0

கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய 4 பேரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அமலாக்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களது இடங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக நிர்வாகி வீடு: கோவையில், திமுக நிர்வாகி செந்தில் கார்த்திகேயனுக்கு சொந்தமான அலுவலகத்தில் கடந்த மே மாதம் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து சென்றனர். இந்நிலையில், அங்கு நேற்று மீண்டும் சீல் அகற்றப்பட்டு சோதனையை அதிகாரிகள் தொடர்ந்தனர்.

இதுதவிர அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்களான அரவிந்த் மற்றும் அருண்பிரசாத் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. தனியார் குழுமம் ஒன்றிலும் நேற்று வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘கடந்த முறை மேற்கொள்ளப்பட்ட சோதனை முற்றிலும் நிறைவடையாத நிலையில் செந்தில் கார்த்திகேயனுக்கு சொந்தமான அலுவலகத்தில் சீல் அகற்றப்பட்டு நேற்றுமீண்டும் சோதனை நடத்தப்பட்டது’’ என்றனர்.

ஆவணங்கள் அடிப்படையில்..: ஏற்கெனவே வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் நேற்று கோவையில் அமைச்சருக்கு தொடர்புடைய 4 பேரின் வீடு மற்றும் அலுவலங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.