கிண்ணியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குக!

259 0

கிண்ணியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சருக்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சருக்கும் அவசரமாக உத்தரவிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் விசேட கலந்துரையாடல் கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி குறித்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, டெங்கு நோயினால் கிண்ணியாவில் எற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

டெங்கு நோயின் தாக்கத்தால் கிண்ணியாவில் இதுவரை 14 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும், 800க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டியதுடன், அங்கிருக்கும் வைத்தியசாலைகளில் உள்ள பற்றாக்குறைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

இந்த விடயம் தொடர்பில் அவசரமாக நடவடிக்கை எடுக்குமாறும், வைத்தியசாலைகளில் உள்ள பற்றாக்குறை சம்பந்தமாக ஆராய்ந்து கொழும்பிலிருந்து விசேட வைத்தியர்கள், தாதிமார்கள் மற்றும் மருந்து வகைகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு இதன் போது ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

இதேவேளை, கிண்ணியாவில் ஏற்பட்டுள்ள நிலைமையை அனர்த்தமாக பிரகடனப்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முன்வைத்த கோரிக்கை சம்பந்தமாக, ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையினை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பாவுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், கிண்ணியாவில் ஏற்பட்டுள்ள அவசர நிலை சம்பந்தமாக அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி, இராஜாங்க அமைச்சரிடன் உறுதியளித்துள்ளார்.