தேர்தலை நடத்தாமல் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளமைக்க பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பெற்றுக்கொள்வதுடன் மக்கள் வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும்.
பொதுஜன பெரமுனவின் உள்ளக முரண்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளமைக்கும் தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியலமைப்புக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்த நடவடிக்கைகளை எடுத்த போது அரசாங்கம் நிதி விடுவிப்பை தடுத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டது.
தற்போது மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண ஆளுநர்களின் கண்காணிப்புடன் உள்ளூராட்சி மன்றங்கள் நிர்வகிக்கப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீளமைக்கும் அதிகாரத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சருக்கு வழக்கும் வகையில் மாநகர ,நகர சபை சட்டத்தை திருத்தம் செய்யும் வகையில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம் ஆகிய பதவி நிலைகளின் பதவி காலத்தை நீடிக்க வேண்டுமாயின் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என அரசியலமைப்பின் 83(அ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாம் தெரிவு செய்த பிரதிநிதிகளின் பதவி காலத்தை நீடிக்க வேண்டுமா ? இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் நாட்டு மக்களுக்கு உண்டு என்பதை அரசியலமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளமைக்க வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும்.நிதி இல்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்ட அரசாங்கம் மக்கள் வாக்கெடுப்புக்கு செல்வது சாத்தியமற்றது.கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளழைப்பதை காட்டிலும் தேர்தலை நடத்துவது சிறந்ததாக அமையும்.
உள்ளூராட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகம்
நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அதனால் தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுன குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்ட போது வேட்பு மனுத்தாக்கல் செய்த பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களிடம் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ‘தேர்தல் வாக்கெடுப்பை பிற்போட்டதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் ஆணையாளர்களாக பதவி வகித்த உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்’ என வாக்குறுதி வழங்கினார்கள்.
அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு விசேட ஆணையாளர்களை நியமிக்கும் அரசாங்கத்தின் முயற்சி நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதால் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளமைக்கும் வகையில் தனிநபர் பிரேரணையை முன்வைத்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த தனிநபர் பிரேரணை முன்வைக்கப்படவில்லை.மாறாக பொதுஜன பெரமுனவின் உள்ளக முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பதற்காகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட முடியும் என்றார்.

