நாட்டில் தனிநபர் வருமான வரிக் கோப்புகள் 5 இலட்சமாக காணப்பட்டாலும் அவற்றில் 31000 பேர் மாத்திரமே வரி செலுத்துகின்றனர்.
நாட்டில் 105,000 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 328 நிறுவங்களிடமிருந்து 82 சதவீத வரி வருமானம் மாத்திரமே கிடைக்கப்பெறுகிறது என தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கடந்த வாரம் கூடிய தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
உண்ணாட்டரசிறைச் சட்டத்தை திருத்துவது மற்றும் வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவை இரத்துச் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் வரி வருமானம் கிடைப்பதை ஒழுங்குபடுத்துவதற்கு முறையான பொறிமுறையொன்றை உருவாக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
நாட்டில் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் 105,000 பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இந்த நிறுவனங்களிலிருந்து 82 சதவீத வரி வருமானம் 328 நிறுவனங்களிலிருந்தே கிடைப்பதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் வழங்கும் போது அடைந்திருக்க வேண்டிய விடயங்களான நாட்டின் பணவீக்கம்? நாட்டின் கையிருப்பு அளவு மற்றும் அரசாங்க வருமானம் தொடர்பான இரண்டாவது மீளாய்வு இடம்பெறும் டிசம்பர் மாதத்தில் மேம்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது முக்கியமானது என குழுவின் தலைவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு இலங்கை சுங்கத் திணைக்களம், மது வரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் என்பவற்றுடன் தனது குழு தொடர்ந்தும் கலந்துரையாடல் மேற்கொண்டு அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
வரி வருமானங்களை சேர்ப்பதில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு முடியாமல் போயுள்ளமை தொடர்பில் விரிவாகக் கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர் வரி வருமானத்தை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குழு என்ற வகையில் அதில் சாதகமான தலையீட்டை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு செலுத்தவேண்டிய நிலுவைத் தொகையான 904 பில்லியன் ரூபாய் தொகையை அறவிடுவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
வரியை அறவிடுவதை முறைமைப்படுத்த உண்ணாட்டரசிறைச் சட்டத்தை திருத்துவதற்கும் வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவை இரத்துச் செய்வது தொடர்பிலும் நீதி அமைச்சருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அத்துடன் தற்பொழுது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தனது உதவியை முழுமையாக வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
குழு கூட்டத்தில் கலந்துக்கொண்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகையில், தமது திணைக்களத்தின் நடவடிக்கைகளை வினைத்திறனாக்குவதற்கு தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதிகத் திட்டங்கள் பற்றிய குழுவினால் வழங்கப்படும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கு அரசாங்கத்தின் வரி வருமான இலக்கான 1.6 ட்ரில்லியன் ரூபாயை முதலாவது 6 மாதங்களில் 40 சதவீதமாகவும் இரண்டாவது ஆறு மாதங்களில் 60 சதவீதமாகவும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்ததாகவும், முதலாவது 6 மாதத்துக்கான இலக்கை தற்பொழுது அடைந்துள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். அத்துடன் அடுத்த 6 மாதங்களுக்கான எதிர்பார்க்கப்பட்ட வரி வருமானத்தைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது குழுவின் தலைவர் குறிப்பிட்டதாது, வரி வருமானத்தைப் பெற்றுக்கொள்வதை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு பொறிமுறையொன்று அமைப்பது அவசியமானது எனத் தெரிவித்தார்.இந்நாட்டில் நிறுவனங்களைப் பதிவு செய்வதற்காக வழங்கப்படும் தகவல்கள் உண்மையானவை அல்ல என்பதால் வரி அறவிடும் போது சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாக குழுவின் உறுப்பினர்களும் அதிகாரிகளும் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் இலங்கை சுங்கம், மது வரித் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் என்பவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்த டிஜிட்டல் தகவல் கட்டமைப்பொன்றை விரைவாக தயாரிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் நாட்டின் தனிநபர் வரிக் கோப்புகள் மீள் பதிவு செய்யும் அவசியம் தொடர்பிலும் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

