மலையகத்தில் நாடகமொன்ற மேடையேற்ற முயன்றவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது, இராணுவம் அனைத்து தமிழர்களையும் சந்தேகத்துடன் பார்ப்பதையே வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், ஆழமாக வேரூன்றியுள்ள இராணுவமயமாக்கலை இது புலப்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அவர் தனது டுவிட்டர் பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் மேலும் இடம்பெறுவதாவது:
கருத்துச் சுதந்திரத்தையும் உடன்பட மறுப்பதையும் ஒடுக்குவதற்காக சட்டத்துக்கு விரோதமான முறையில் செயற்படும் இராணுவம், அனைத்து தமிழர்களையும் சந்தேகத்துடன் பார்ப்பதை மலையகத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் இராணுவமயமாக்கல் என்பது ஆழமாக வேரூன்றியுள்ளது.
கொட்டியாகல தேயிலை தோட்டத்தில் ராசையா லோகநாதன் என்பவர் கடந்த 7ஆம் திகதி நாடகமொன்றை மேடையேற்ற திட்டமிட்டிருந்தார்.
குறிப்பிட்ட தோட்ட முகாமையாளர்கள் பொலிஸாருக்கு வழங்குவதற்கென கடிதமொன்றை தருமாறு ஏற்பாட்டாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
6ஆம் திகதி லோகநாதன் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் அடையாள அட்டை இலக்கம், நாடகத்தில் நடிப்பவர்களின் விபரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை கேட்டுள்ளனர்.
அதற்கு லோகநாதன் ஏன் என கேள்வி எழுப்பியவேளை, பாதுகாப்பு வழங்குவதற்காக என பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், குறிப்பிட்ட நாடகம் தொடர்பில் இராணுவம் விசாரிப்பதாக ஏற்பாட்டாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. ஏற்பாட்டாளர்கள், ‘இராணுவம் அச்சுறுத்தியதா’ என தோட்ட நிர்வாகத்தினரிடம் கேட்டுள்ளனர். ‘அச்சுறுத்தவில்லை; ஆனால், நாடகம் குறித்து விசாரித்தனர்’ என தோட்ட நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து, 7ஆம் திகதி மௌசாகலை இராணுவ முகாமிலிருந்து சுரேஸ் என்ற அதிகாரி லோகநாதனை தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். அவருக்கு லோகநாதனின் அடையாள அட்டை இலக்கம் தெரிந்துள்ளது.
முகநூலில் நாடகம் குறித்த விபரங்களை பார்த்ததால் மேலும் தகவல்களை பெற விரும்புவதாக அவர் லோகநாதனிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது மலையகத்தில் நாடகங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது இராணுவத்தின் கடமையா என லோகநாதன் கேட்டுள்ளார்.
அதற்கு, அந்த இராணுவ அதிகாரி, நாடகத்தை நடத்துவதற்கு பொலிஸாரின் அனுமதி கிடைத்துள்ளதால் நாங்கள் எந்த பிரச்சினையும் தரப்போவதில்லை; எந்த பிரச்சினையும் வராது என கூறியுள்ளார்.
இது குறித்து, இராணுவ பேச்சாளரிடம் கேட்டபோது அவர், ‘இதனை என்னால் உறுதி செய்யமுடியாது; பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுங்கள்’ என தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், மௌசாகலை இராணுவ முகாமை சேர்ந்த கேர்ணல் சிவா என்பவர் ‘பல சம்பவங்கள், நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. அவற்றுக்கு புலம்பெயர் அமைப்புகள் நிதி வழங்குகின்றன’ என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ‘சமீபத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலையகத்துக்கு விஜயம் மேற்கொண்டார். அவ்வாறானவர்கள் விஜயம் மேற்கொண்டால் அவர்களின் பாதுகாப்புக்காக எங்களுக்கு அறிவிக்கவேண்டும்’ என்ற அந்த அதிகாரி, விடுதலைப்புலிகளின் கொள்கை மலையகத்திலும் பரவவேண்டுமா என்றும் கேட்டுள்ளார்.
குறிப்பிட்ட அதிகாரி, தமிழ் கட்சிகள் மலையகத்துக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து கரிசனை வெளியிட்டுள்ளதுடன், அங்கு இடம்பெறும் அனைத்து நிகழ்வுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
‘பொதுமக்களுக்கு குழப்பம் விளைவிக்காமல் நாங்கள் அதனை செய்வோம்’ என்ற அந்த அதிகாரி, அந்த குழுவின் மத்தியில் புலனாய்வாளர்கள், இராணுவத்தினர் இருப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
தமிழ் அரசியல் செயற்பாடுகள் சந்தேகத்துடன் பார்க்கப்படுகின்றன. கண்ணுக்கு தெரியாத மற்றும் அறியப்படாத வழிகளில் அதிவேகமாக வளர்ந்த இராணுவம் சட்டத்தினால் வழங்கப்படாத, ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்களை பயன்படுத்தலாம் என நினைக்கிறது. ஆனால் தென்னிலங்கையின் எந்தவொரு அரசியல் கட்சியும் இது குறித்து கேள்வி எழுப்பாது என அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

