சிங்களத்தின் எதிர்காலத் தலைமைக்கு சிங்க(ள)க் குட்டிகள் இரண்டு களத்தில்!

139 0

மகிந்த தரப்பிலிருந்து அவரது மகன் நாமலும், ரணில் தரப்பிலிருந்து அவரது மைத்துனர் றூவன் விஜேவர்த்தனவும் சிங்களத் தேசத்தின் எதிர்கால தலைமைக்கு மறைமுகமாகவும், பகிரங்கமாகவும் வளர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்களால் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கையில்லை. இவர்களுக்கு நிகராக தமிழர் உரிமைகளுக்கு நீதி கேட்டுப் போராடக்கூடிய ஓர் இளந்தலைவர் எப்போது வரப்போகிறார்?

இலங்கை அரசியல் என்பது தீர்க்கமான எந்த முடிவையும் எட்டாது, அல்லது எட்ட விடாது பிரச்சனைகளை நகர்த்திச் செல்லும் பாணியையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சிங்களத் தலைமைகள் எப்போதும் தங்களை ஆளும் வர்க்கமாக வைத்துப் பார்ப்பதால் ஏற்பட்ட துர்ப்பாக்கிய நிலை இது.

நாடு எத்தகைய பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அதற்கான தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் ஆட்சித் தலைமைகள் ஒருபோதும் அக்கறையில்லாது இருப்பதே இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படாமைக்கு முக்கிய காரணம்.

பண்டா – செல்வா ஒப்பந்தம் மதவாத பௌத்த பிக்குகளின் பேரெதிர்ப்பால் ஒருதலைப்பட்சமாக சிங்களத் தலைமையால் கிழித்தெறியப்பட்டது. டட்லி – செல்வா ஒப்பந்தம் ஐந்தாண்டுகளுக்கு டட்லியின் தேசிய அரசாங்கத்தை முழுமையாக்க உதவியதே தவிர தமிழருக்கு எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த ஏழரை தசாப்த காலத்தில் தமிழரின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய எத்தனையோ வழிமுறைகள் அடையாளம் காணப்பட்டன. ஆனால் அவை எதனையும் நிறைவேற்ற சிங்கள தேசம் முன்வரவில்லை. மாவட்ட சபை, மாகாண சபை என்பவை கானல் நீராய்ப் போயின. சிங்களத் தலைமைகளின் எதேச்சாதிகாரப் போக்கு தமிழர் பிரச்சனைத் தீர்வுகளின் முயற்சியை கருச்சிதைவாக்கியது.

ஓர் இனத்தின் அடையாளத்தை காப்பதற்கான அடிப்படை அம்சங்களை நிராகரிப்பது மட்டுமன்றி, தொல்பொருள் என்ற பெயரில் அவற்றை அடாத்தாக பறித்தெடுப்பதே ஜனநாயகம் என காட்சிப்படுத்தப்படுகிறது. இதனூடாக தமிழ் இனம், தமிழ் மண், தமிழர் பண்பாடு, தமிழர் பாரம்பரியம் என்பவற்றை இல்லாமல் செய்ய முடியுமென சிங்கள தேசம் கங்கணம் கட்டி நிற்கிறது.

1987ம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் காரணமாக நிறைவேற்றப்பட்ட இலங்கை அரசியல் அமைப்பின் 13வது திருத்தம், பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் போன்ற சட்ட வரையறை அற்றவையல்ல. 13வது திருத்தம் என்பது சட்டத்துக்கு உட்பட்டது. அதனை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்குண்டு. அதனை நிறைவேற்றுமாறு வலியுறுத்தும் பொறுப்பு இந்தியாவுக்குண்டு.

ஆனால், இரண்டு நாடுகளும் 13ம் திருத்தத்தை மையப்படுத்தி கிளித்தட்டு விளையாடுகின்றன. தமிழ்த் தலைமைகள் இந்த விளையாட்டைப் புரிந்து கொண்டும் தெரியாததைப்போல அறிக்கைகள், கடிதங்கள், கோரிக்கைகள் என்று விளையாட்டுக் காட்டுகின்றன.

காணி அதிகாரமும் காவற்துறை அதிகாரமும் தமிழர்களுக்கு அவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தில் கிடைக்கக்கூடாதென்பதில் சகல சிங்கள கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு ஒரே தண்டவாளத்தில் பயணிக்கின்றன. தேர்தலில் தங்களுக்குள் தோல்வி ஏற்பட்டாலும் தமிழரைத் தோற்கடிப்பதில் அவர்களுக்குள் வேற்றுமையில்லை. இதன் வெளிப்பாடே 1978ன் பின்னரான பொதுத்தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளும் அவர்களின் செயற்பாடுகளும்.

அரசியல் யாப்பின் அடிப்படையில் ரணிலின் ஜனாதிபதித் தெரிவு ஏற்கப்பட வேண்டியதொன்றாயினும், தேர்தல் வாக்களிப்பின் அடிப்படையில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அதற்கான ஆணையை மக்களிடம் பெறவில்லையென்பது ஒரு வாதமாகவே தொடர்கிறது. ஆனாலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற கோதாவில் தமிழர் பிரச்சனைத் தீர்வு முயற்சியைத் தவிர மற்றெல்லாவற்றிலும் ரணில் தாம் விரும்பியவைகளை நிறைவேற்றி வருகிறார்.

அதேசமயம் தேர்தல் மூலம் மக்கள் ஆணையைப் பெற்று ஜனாதிபதிப் பதவியை தொடர்வதிலும் அவர் தீவிர முனைப்புக் காட்டி வருவது தெரிகிறது. எவ்வகையிலாவது அதற்கான தேர்தலை அடுத்த வருட இறுதிக்குள் அவர் நடத்துவாரென பொதுவான எதிர்பார்ப்புண்டு.

மகிந்தவின் பொதுஜன பெரமுன, ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி, சஜித் பிரேமதாசவின் மக்கள் சக்தி ஆகிய மூன்றுமே இப்போது பிரதான அரசியல் கட்சிகளாக இயங்குகின்றன. ஆனால், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்போது இரண்டு கட்சிகளே நேரடியாக மோதும் நிலை ஏற்படும் சாத்தியமுண்டு.

இந்தப் பின்னணியில் பார்க்கின், எதிர்கால சிங்களத் தலைமைக்காக இரண்டு சிங்க(ள)க் குட்டிகள் போதிய தீனி போட்டு வளர்க்கப்படுவதை பார்க்க முடிகிறது. மகிந்தவின் வாரிசான நாமல் ராஜபக்ச இதில் ஒருவர். அடுத்தவர் ரணிலின் பரம்பரையைச் சேர்ந்த றூவன் விஜேவர்த்தன. இவர்கள் இருவரும் போட்டி அடிப்படையில் அரசியலுக்காக உருவாக்கப்பட்டு வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இவர்களது குடும்பப் பின்னணி, அரசியல் அடையாளம், நிகழ்கால செயற்பாடுகள் என்பவற்றை சற்று விரித்துப் பார்ப்பதே இந்தப் பத்தியின் அடிப்படை அம்சம்.

மகிந்த ராஜபக்சவின் மூன்று புதல்வர்களில் மூத்தவர் நாமல் ராஜபக்ச. 1986ல் பிறந்த இவருக்கு இப்போது 37 வயது. இங்கிலாந்தின் லண்டன் சிற்றி பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் மூன்றாந்தரத்தில் பட்டம் பெற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 166,660 விருப்பு வாக்குகளால் வெற்றி பெற்று பரம்பரை அரசியலுக்குள் புகுந்தவர்.

இவ்வாறு கூறுவதற்கான காரணம் ராஜபக்ச குடும்பம் சட்டசபை காலத்திலிருந்தே சிலோன் அரசியலில் நேடியாக ஈடுபட்டதனால். நாமலின் பட்டனாரான (மகிந்தவின் தந்தை) டொன் அல்வின் ராஜபக்ச அம்பாந்தோட்டையிலுள்ள பெலியத்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக 1947ல் தெரிவாகி 1965 வரை இருந்தவர். டொன் அல்வின் ராஜபக்சவின் சகோதரரான டொன் மத்தியு ராஜபக்ச அம்பாந்தோட்டைத் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக 1936ல் தெரிவு செய்யப்பட்டவர்.

மகிந்த ராஜபக்ச 1970ல் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றபோது முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானவர். பின்னர் பிரதமராகவும் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவர். மகிந்தவின் சகோதரர்களான சாமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச ஆகியோர் அமைச்சர்களாகவிருந்தவர்கள். மற்றொரு சகோதரரான கோதபாய சில வருடங்கள் ஜனாதிபதியாக இருந்தவர். நாமல் ராஜபக்ச 2020 முதல் 2022 வரை அமைச்சராகவிருந்து அறகலய பேரெழுச்சியால் பதவி துறக்க நேர்ந்தது.

இப்போது குடும்ப பாரம்பரியத்தை முன்னிறுத்தி ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஜனாதிபதியாகும் சுயவிருப்பை முன்னிறுத்தி அதற்கான செயற்பாடுகளில் இறங்கியுள்ளார் நாமல். தனது மகனின் கனவை நனவாக்குவதில் மகிந்த முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்.

மறுதரப்பில் ஐக்கிய தேசிய கட்சி தங்களின் அரசியல் வாரிசாக றூவன் விஜேவர்த்தனவை வளர்த்து வருகிறது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவின் தாய்மாமன் மகனே றூவன். இவர் தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராகவும், ஜனாதிபதி ரணிலின் காலநிலை மாற்ற மூத்த ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். நல்லாட்சி அரசில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தவர்.

விஜேவர்த்தன பரம்பரை, சேனநாயக்க பரம்பரை ஆகியவற்றின் அரசியல் வாரிசாக றூவன் அடையாளப்படுத்தப்படுகிறார். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரான டி.ஆர்.விஜேவர்த்தனவின் மகன் றஞ்சித் விஜேவர்த்தனவின் புதல்வர் இவர். (றஞ்சித் விஜேவர்த்தனவின் சகோதரி நளினி விக்கிரமசிங்கவின் புதல்வரே ரணில் விக்கிரமசிங்க).

றஞ்சித் விஜேவர்த்தன திருமணம் புரிந்தது றஞ்சினி சேனநாயக்க என்பவரை. இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் புதல்வர் றொபேர்ட் சேனநாயக்க றஞ்சினியின் தந்தை. முன்னாள் பிரதமர் டட்லி சேனநாயக்க, றோபேர்ட் சேனநாயக்கவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியை நோக்கில் றூவன் விஜேவர்த்தன பரம்பரை – சேனநாயக்க பரம்பரையின் வாரிசாக கணிக்கப்படுகிறார். இவருக்கு ஜே.ஆர்.ஜெயவர்த்தன பரம்பரையுடனும் இரத்த உறவுண்டு. ஜே.ஆரின் தாயாரின் கூடப்பிறந்த சகோதரரே றூவனின் பாட்டனாரான லேக்ஹவுஸ் நிறுவனர் டி.ஆர்.விஜேவர்த்தன.

அதுமட்டுமன்றி, ஐலன்ட் பத்திரிகை நிறுவனரும் பிரபல தொழில் அதிபருமான உபாலி விஜேவர்த்தனவின் தந்தையும் றூவனின் பாட்டனாரும் கூடப்பிறந்த சகோதரர்கள். 1975ல் பிறந்து குறுகிய காலத்தில் அரசியலில் முன்தள்ளிக் கொண்டுவரப்பட்ட றூவன் விஜேவர்த்தன, எதிர்கால அரசியலில் நாமல் ராஜபக்சவின் போட்டியாளராக களத்தில் வளர்க்கப்பட்டு வருகிறார்.

இவைகள் அனைத்தையும் கூட்டி பெருக்கி கழித்துப் பார்க்கையில் சிங்கள தேசத்தின் எதிர்கால ஆட்சிக்கு இரண்டு அரசியல் குடும்பங்களின் வாரிசுகள் சுவீகார புதல்வர்களாக – எதிரும் புதிருமாக உருவகப்படுத்தி முன்நகர்த்தப்படுகின்றனர்.

இவர்களுக்கு நிகராக தமிழர் உரிமைகளுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தும் வல்லமை உள்ள ஒரு தமிழர் இதுவரை உருவாக்கப்படவில்லையென்றே தெரிகிறது. மூப்பும் பிணியும் பிணைந்திருக்கும் இன்றைய தமிழ்த் தலைமைகள் எப்போது இதுபற்றிச் சிந்திக்கப் போகின்றன?

பனங்காட்டான்