முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆதரவு எமக்கு நிச்சயம் தேவை. கடந்த ஆண்டு அவர் உள்ளடங்கலாக மேலும் 9 பேரது கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டது. அந்த தீர்மானத்தை மீளப்பெற்று அவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 15ஆம் திகதி சுதந்திர கட்சியின் நிறைவேற்றுக்குழுவும் , மத்திய குழுவும் கூடவுள்ளது. இதன்போது கடந்த ஆண்டு கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக நீக்கப்பட்ட 9 பேர் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது. தற்காலிகமாக கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டவர்களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் உள்ளடங்குகின்றார்.
அவர் சு.க.வின் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றியிருக்கின்றார். எனவே அவருக்கும் மீள அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். அவர் இந்த கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருக்கின்றார். அவர் பரிந்துரைத்ததன் பின்னணியிலேயே மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டனர்.
கடந்த காலங்களில் எமக்கு பெரும் பலமாக அமைந்த அவரது ஒத்துழைப்புக்கள் மீண்டும் சுதந்திர கட்சிக்கு தேவையாகும். எனவே மீண்டும் கட்சியுடன் இணைவது குறித்து அவர் சிந்திக்க வேண்டும். அவ்வாறு அவர் இணைவாரானால் நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம். சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் நாட்டின் முன்னேற்றத்துக்கு நாமும் ஒத்துழைப்பை வழங்குவோம் என்றார்.

