இலங்கை முகங்கொடுக்கவிருக்கும் ‘பொருளாதாரப் பேரழிவு’ குறித்து தான் முன்கூட்டியே எச்சரித்ததாகவும், இருப்பினும் அப்போதைய மத்திய வங்கியின் மேலிடமோ அல்லது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமோ அதற்கு செவிசாய்க்கவில்லை என்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கத்தின் ‘நவீன நாணயக்கொள்கையின்’ விளைவாக நாடு முகங்கொடுக்கவிருக்கும் மிகமோசமான பொருளாதார நெருக்கடியை மூன்று வருடங்களுக்கு முன்னரே தான் கணித்ததாகவும், மத்திய வங்கியின் அப்போதைய நடவடிக்கைகளின் ஆபத்தான தன்மை குறித்து தான் எச்சரித்ததுடன் அதன் விளைவாக 2021 செப்டெம்பரில் முன்கூட்டியே ஓய்வுபெறுவதற்கு நிர்பந்திக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏ.எஃப்.பி செய்திச்சேவைக்கு வழங்கியிருக்கும் விரிவான நேர்காணலிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அக்காலப்பகுதியில் நாணயக்கொள்கை குழுவின் தலைவர் என்ற ரீதியிலும், சிரேஷ்ட பிரதி ஆளுநர் என்ற வகையிலும் நான் எப்போதும் கரிசனைகளை வெளிப்படுத்தியிருக்கின்றேன். இருப்பினும் மத்திய வங்கி உத்தியோகத்தர்களான நாம், நிர்வாகத்துடனும் கொள்கை ரீதியில் அரசாங்கத்துடனும் எமக்கிருந்த உள்ளகக் கருத்து வேறுபாடுகள் தொடர்பில் பகிரங்கமாக எதனையும் வெளிப்படுத்தவில்லை’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ‘நான் மாத்திரமன்றி மத்திய வங்கியின் ஏனைய உத்தியோகத்தர்களும் தமது கரிசனைகளை வெளிப்படுத்தினார்கள். நான் வெளியேறிய பின்னரும்கூட அவர்கள் கரிசனைகளை முன்வைத்தார்கள். இருப்பினும் அவற்றை யாரும் செவிமடுக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அப்போதைய சூழ்நிலையில் மத்திய வங்கியின் உயர்மட்டத்திலிருந்தும், வெளியிலிருந்தும் மாற்று சிந்தனைகள் முன்வைக்கப்பட்டன’.
‘குறிப்பாக அப்போது மத்திய வங்கியினால் 6 மாதகாலத்துக்கான பொருளாதார செயற்திட்டம் வெளியிடப்பட்டது. இருப்பினும் முற்றுமுழுதாக சாத்தியமற்றதும், பொய்யானதுமான எதிர்வுகூறல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அச்செயற்திட்டம் ஏப்ரல் மாத இறுதியில் எவ்வித பலனையும் தராமல் முடிவுக்கு வந்தது’ என்றும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
‘அப்போது என்ன நடக்கின்றது என்பதை மத்திய வங்கி உத்தியோகத்தர்கள் அறிந்திருந்தார்கள். அதுகுறித்த கரிசனைகளையும் அவர்கள் வெளிப்படுத்தினார்கள். இருப்பினும் அச்சத்தின் விளைவாகவும், ‘உள்ளக ரீதியில் எந்தவொரு கரிசனையையும் முன்வைக்கலாம், கலந்துரையாடலாம். ஆனால் யாரும் வெளியில் பேசக்கூடாது’ என்ற சட்டதிட்டத்தின் காரணமாகவும் யாரும் வெளிப்படையாகப் பேசவில்லை. மத்திய வங்கி உத்தியோகத்தர் ஒருவரைப் பொறுத்தமட்டில், மத்திய வங்கிக் கட்டமைப்புக்கு வெளியே சென்று தைரியமாகப் பேசுவதென்பது மிகவும் கடினமான விடயமாகும்’ என்று அந்நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ள நந்தலால் வீரசிங்க, இருப்பினும் தான் தனிப்பட்ட ரீதியில் கரிசனைகளை வெளிப்படுத்தியதாகவும், அவர் அஞ்சியது போன்ற பேரழிவே கடந்த ஆண்டு மே – ஜூலை மாதகாலத்தில் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

